Suresh Gopi: "சபரி மலையை தொட்டால் அவ்வளவு தான்" மிரட்டல் விடுத்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி!
Suresh Gopi : மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சுரேஷ் கோபி சபரிமலையில் கடந்த ஆண்டு முறையான ஏற்பாடுகள் செய்யப்படாதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது குறித்து பேசி இருந்தார்.
மலையாள திரையுலகின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் கோபி. சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற சுரேஷ் கோபி மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார்.
தமிழ்நாடு மீதும் எனக்கு பாசம்:
அவர் பேசுகையில் கேரளா மக்கள் எனக்கு கொடுத்த அபரிதமான ஆதரவால் ஆசீர்வாதத்தால் நான் இன்று எம்.பியாகியிருக்கிறேன். ஆனால் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னரே சொன்னது போல தமிழ்நாட்டின் எம்.பியாகவும் நான் செயல்படுவேன். நான் சினிமா துறையில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தது சென்னை தான். சென்னை தான் தூங்க இடம் கொடுத்து வாய்ப்பையும் வாங்கி கொடுத்து வளர்ந்துவிட்டது. தமிழ்நாடு மீது எனக்கு அளவு கடந்த பாசம் உண்டு. நான் மிகவும் நேசிக்கிறேன்.
தமிழ்நாட்டிற்கும் தேவையானவற்றை நிச்சயம் செய்வேன். சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில் என்னால் தேவையானதை செய்யமுடிடியும். ஆனால் பெட்ரோலியத்துறை முற்றிலும் தொழில்நுட்பம் சார்ந்தது. அதை பற்றி நான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டு வருகிறேன். அதற்கு பிறகு தான் அது சார்ந்த வேலைகளை என்னால் துவங்க முடியும். அதனால் பெட்ரோல் விலை குறைப்பு பற்றி தற்போது சிந்திக்க முடியாது.
காணாமல் போய்விடுவார்கள்:
அதே போல சபரிமலையில் கடந்த ஆண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை. சபரி மலையை யாரும் தொட முடியாது. அப்படி தொட்டால் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என எச்சரிக்கும் வகையில் கூறியிருந்தார் அமைச்சர் சுரேஷ் கோபி.