‛சேது படத்துல இருந்து நான்தான் கேஷியர்... பாலாவை டெடர் டைரக்டரா மாத்திட்டாங்க..’ - ரீவைண்ட் செய்யும் ‛சித்தன்’ மோகன்!
‛அப்போதிருந்தே பாலாவை ஒரு டெரர் டைரக்டராக சித்தரித்துவிட்டனர்...’ மோகன்
‛என்ன சித்தா... கிழியுதா...’ என்கிற டயலாக்கை நாம் இன்றும் மீம்ஸ்கள் வழியாக பார்த்தும், கேட்டும் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம், சினிமாவில் தயாரிப்பு பிரிவில் பல ஆண்டுகளாக பயணித்தாலும், திரைக்கு வரும் போது தான் அதற்கு ஒரு அடையாளம் கிடைக்கும். அந்த வகையில், சுப்பிரமணியபுரம், பரதேசி உள்ளிட்ட படங்களில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய மோகன், தன்னுடைய திரை அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். கேசியராக, நடிகராக அவர் பயணித்தது குறித்து இணையம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி இதோ...
‛‛பாலாட்ட நடிகரா நான் வாங்காத திட்டு கிடையாது. ஆனால் அந்த திட்டு எனக்கானதானு தெரியாது. பரதேசி படத்துல ஒரு சீன். நான் டயலாக் பேசுனேன். கொஞ்சம் நேரம் பாலா பாத்துட்டு இருந்தாரு. கூப்பிட்டாரு. நீயெல்லாம் எதுக்கு படத்துல நடிக்க வந்தனு கேட்டாரு. போச்சுடானு ஓடிவந்துட்டேன். அப்போது ஒரு உதவி இயக்குனர் வந்தாரு. மோகன் இங்கே வாங்கனு கூப்பிட்டாரு. நானும் போனேன். ‛அவர் உங்களை திட்டுனாருனு நெனக்குறீங்களா... என்னையை தான் திட்டுனாரு.... என்னை நேரடியா திட்டமுடியாததால, உங்க வழியா என்னை திட்டுறாருன்னு...’ சொன்னாரு.
பாலாவுக்கு நான் ஆரம்பித்துல இருந்தே கேசியரா இருக்கேன். சேது படம் பாலாவுக்கு முதல் படம். தயாரிப்பாளருடன் நல்ல ஒத்துப் போய் தான் போய் கொண்டிருந்தது. திடீர்னு என்ன பண்ணுவார்னா, சீன் சரி இல்லைன்னா தூக்கி போட்ருவாரு. அவருக்கு பிடிக்கலைன்னா, அந்த சீனை மறுபடி எடுப்பாரு. அப்போ ரீல். இப்போ மாதிரி டிஜிட்டல் கிடையாது. ரீல் வேஸ்ட் ஆகும். திரும்ப சீன் எடுக்குறதால தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரும். இதை கவனித்த தயாரிப்பாளர், என்னிடம் அழைத்தார். ‛என்னய்யா... அதே சீனை திரும்ப எடுக்குறாங்கே...’ என கேட்டார். அவர் பாலாவிடம் நேரா போய் கேட்கமுடியாது. அதனால என்னை அனுப்பி கேட்க சொல்வாரு. நான் போய் பாலாவிடம் கேட்பேன். ‛அண்ணே... தயாரிப்பாளர் இப்படி கேட்கிறார்னு...’ கேட்பேன். அவர், ‛உனக்கு ஒன்னும் தெரியாது மோகன்... நீ போ...’ என, என்னை போகச் சொல்லிவிடுவார்.
நானும் தயாரிப்பாளரிடம் சமாளிக்க வேண்டும். அதற்காக, ‛அண்ணே... இது வேறு சீனாம்ணே...’ என்பேன். அதற்கு தயாரிப்பாளர், ‛யோவ்... அதே வெடியை போட்டு , அதே காலேஜ் சீன் தான்ய்யா எடுக்குறாங்கே...’ என்பார். ‛இது வேற காலேஜ் சினாம்ணே..’ என தயாரிப்பாளரை சமாளிப்பதே எனக்கு ஒரு வேலையாகிப் போனது.
அப்போதிருந்தே பாலாவை ஒரு டெரர் டைரக்டராக சித்தரித்துவிட்டனர். சுப்பிரமணியபுரம் சித்தன் கேரக்டர் எனக்கு பரிச்சயமானது. அதில் வரும் நண்பர்கள் போலவே, மதுரையில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். துரோகம் செய்தவர்களும் உண்டு. காதலால் தான் பெரும்பாலும் அப்போ துரோகம் வரும். நான் லவ் பண்ண பொண்ணை, நகட்டிட்டு போயிட்டானுங்க. அப்போல்லாம்... ஏரியாவிட்டு ஏரியா காதல் பண்ணா பெரிய பிரச்சனை பண்ணுவாங்க. நல்லா பேசிட்டு இருக்கிற பொண்ணு, நாலு நாள் கழிச்சு போனா... முகத்தை திருப்பிட்டு போகும்...’ இது தான் தம்பி, எங்க காலத்து லவ், நட்பு, மோதல், துரோகம் எல்லாமே...’ என, தன் கடந்த கால வாழ்க்கையையும் திருப்பிப் போட்டார் ‛சித்தன்’ மோகன்.