Peter Hein About Rajini: ‛ராஜா... 70 ஆகப்போகுது மா... என்னவச்சு இப்படி டார்ச்சர் பண்ற...’ பேட்ட சூட்டிங் சம்பவத்தை விவரித்த பீட்டர் ஹெய்ன்!
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துடன் ஏற்பட்ட அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் மாஸ்டராக வலம் வருபவர் பீட்டர் ஹெய்ன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவத்தை தனியார் யூ டியூப் தளத்திற்கு பேட்டியாக அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் பீட்டர் ஹெய்ன் கூறியிருப்பதாவது, “எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவரது கால் வீங்கியிருந்தது. எப்படி வலிக்கும் என்று யோசித்து பாருங்கள். ரஜினி சார் என்கிட்ட சொன்னாரு. பீட்டர், ராஜா. 70 ஆகப்போகுது மா. 60 பிளஸ் ஆகுது. என்னவச்சு இப்படி டார்ச்சர் பண்ணலாமா?னு கேட்டாரு. நீ டார்ச்சர் பண்ணதுல என் கை எல்லாம் வலிக்குது. நான் ‘இந்த மாதிரி விஷயத்துல நீங்க பண்ணாதான் சார். மக்கள் விரும்புவாங்க’னு சொன்னேன்.
பேட்ட படத்தில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகள் திட்டமிட்டவையே. ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் சாதா அனுபவம் இல்லை. மிகப்பெரிய அனுபவம். பேட்ட படத்தின் சர்ச் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்ட அன்று எனக்கு பிறந்தநாள். எனக்கு பிறந்தநாள், கல்யாண நாள்னு பெரும்பாலான நாட்கள் ஷூட்டிங்கிலே போயிடும். குடும்பத்தோட நேரம் செலவிட்டது குறைவுதான். ரஜினி சார் இல்லாத காட்சியை நாங்கள் படம்பிடித்துக்கொண்டிருந்தோம்.
எல்லாம் பேக்கப் பண்ற நேரத்துல கேக் வெட்டுறதுக்கு கொண்டு வந்தாங்க. பாத்தா ரஜினி சார் அங்க நிக்குறாரு. அவரு வீட்டுக்கு போகவே இல்ல. எனக்காக அவர் வெயிட் பண்ணிகிட்டு இருந்தாரு. ரஜினி சார் எவ்வளவு பெரிய மனுஷன். நான் உண்மையிலே சொல்கிறேன். நானும் அவரின் ரசிகன்தான். மற்ற ரசிகர்களை காட்டிலும் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். உள்ளுக்குள் எவ்வளவு சந்தோஷம் என்று எனக்குதான் தெரியும். இந்தியாவில் எனக்கு எவ்வளவு பெயர் இருந்தாலும், ரஜினி சாருடன் ஒப்பிடும்போது நான் சாதாரண மனிதன்.
எனது இதயத்தை மிகவும் தொட்ட விஷயம் என்னவென்றால், பேட்ட படத்தில் தொடக்க காட்சிக்காக மண்ணை எல்லாம் அள்ளிப்போடும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். ரஜினி சார் அவர்களை அடிக்கும் காட்சி படமாக்கினோம். ரஜினி சாருக்கு 1.30, 1.45க்கு பேக் அப் ஆகிவிட்டது. ஆனால், எங்களுக்கு தொடர்ந்து காட்சிகள் இருந்தது. எனக்கு அன்றுதான் பேட்ட படத்தின் கடைசிநாள். படப்பிடிப்பு முடிய 4.30 மணி ஆகிவிட்டது. அது மணல் பகுதி என்பதால் கேரவன் எல்லாம் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. எனக்கு கடைசி நாள் ஷூட்டிங் என்பதால் எல்லாரும் இருந்தனர்.
யாரோ தூரத்தில் கம்பளி போர்வையை போர்த்திக் கொண்டு நின்றிருந்தார். யாரென்று பார்த்தால் ரஜினி சார் எனக்காக காத்திருக்கிறார். நீங்க இன்னும் போகலயா? சார் என்று கேட்டேன். அதற்கு அவர் உங்களுக்கு இன்று கடைசிநாள்ல மாஸ்டர் அதான் வெயிட் பண்றேன்னு சொன்னாரு. என்னோட கடைசி நாள் என்பதால், அந்த செலிபிரேஷனுக்காக காத்திருந்தார்.”
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்