கலங்கடித்த 'வாழை' : கட்டியணைத்து கதறி அழுத பழைய ஜோக் தங்கதுரை...
மாரி செல்வராஜின் 'வாழை' படத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுத காமெடி நடிகர் தங்கதுரை.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நான்காவது படமான 'வாழை' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. தன்னுடைய சிறு வயதில் அவர் சந்தித்த சில விஷயங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். வாழை பயிரிடும் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனையை மையமாக கொண்டு ஒரு ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த சிறுவனை சுற்றி நகரும் கதைக்களத்தை மையமாக வைத்து இப்படம் வெளியாகியுள்ளது.
கலையரசன், பொன்வேல், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
'வாழை' படம் வெளியாவதற்கு முன்னரே சிறப்பு திரையிடல் மூலம் பிரபலங்கள் பார்வைக்காக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் மாரி செல்வராஜை பாராட்டு மழையில் நனைத்தனர். இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா நெகிழ்ந்து போக, இயக்குநர் பாலா, நடிகர் சூரி உள்ளிட்டோர் உணர்ச்சிவசப்பட்டு கட்டியணைத்து நெகிழ்ச்சி போங்க பாராட்டுகளை தெரிவித்தனர். அந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலானது. நடிகர் தனுஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். கலங்கடிக்கும் உலகத்திற்குள் நுழைய தயாராகுங்கள் என பதிவிட்டு இருந்தார்.
அந்த வகையில் படத்தின் பிரீமியர் காட்சியை பார்வையிட்ட விஜய் டிவி புகழ் ஸ்டாண்ட் அப் காமெடியன் பழைய ஜோக் தங்கதுரை, மாரி செல்வராஜை ஓடி வந்து கட்டியணைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். அந்த அளவுக்கு உணர்ச்சிகளை தூண்டும் வகையில் இப்படம் அமைந்துள்ளது என்பது பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
இப்படம் திருநெல்வேலி மக்களின் சொல்லப்படாத கதை என்பதால் படத்தின் FDFS நிகழ்ச்சியை பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. திரை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களும் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.