Spider Man 4: ஸ்பைடர் மேன் 4 படத்தின் பணிகள் தொடக்கம்..மார்வல் விருந்திற்கு ரெடியான ரசிகர்கள்..!
Spider Man 4: இந்திய ரசிகர்களை அதிகம் கொண்ட ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் நான்காம் பாகத்திற்கான பணிகள் தொடங்கிவிட்டதாக, மார்வல் நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மார்வல் சீரிஸ் படங்களுக்கு ஹாலிவுட் அளவில் மட்டுமல்லாது, உலகளவில் ரசிகர்கள் அதிகம். ஆரம்பத்தில் காமிக் புத்தகங்களாக வந்து கொண்டிருந்த ஸ்பைடர் மேன் என்ற சிலந்தி மனிதன், கார்டூனாகவும் பிறகு திரைப்படங்களிலும் வரத்தொடங்கினார். டோபி மெக்வையர், ஆண்ட்ரூ கார்ஃபீல்டிற்கு பிறகு, புதிய ஸ்பைடர் மேனாக அறிமுகமானவர், டாம் ஹாலாண்ட். இவரது நடிப்பில் இதுவரை, ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங், ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் மற்றும் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் ஆகிய மூன்று படங்கள் மூன்று பாகங்களாக வெளிவந்தன. அதன் தெடர்ச்சியாக, ஸ்பைடர் மேன் படத்தின் நான்காவது பாகத்திற்கான பணிகள் நடைப்பெற்று வருவதாக மார்வல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் தெரிவித்துள்ளார்.
ஸ்பைடர் மேன்-4:
ரசிகர்கள் அனைவரும் அறிந்த முதல் ஸ்பைடர் மேன் ஆன, டோபி மெக்வையர், மொத்தம் மூன்று ஸ்பைடர் மேன் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் நடித்த ஸ்பைடர் மேன் படத்தில் கருப்பு நிற ஸ்பைடர் சூட் அணிந்து, கெத்தான-வில்லன் ஸ்பைடர் மேனாக நடித்திருந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர வரவேற்ப்பு இருந்தது. இதனால், டோபியை வைத்து ஸ்பைடர் மேன் படத்தின் நான்காம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக அந்த பணிகள் தள்ளிப்போடப்பட்டன. கடைசியாக வெளிவந்த நோ வே ஹோம் படத்தில், மூன்று ஸ்பைடர் மேன்களும் ஒன்றாக நடித்திருந்தது, ரசிகர்களை இன்பக் கடலில் ஆழ்த்தியது. இதனால், டோபியை வைத்து கண்டிப்பாக ஸ்பைடர் மேன் நான்காம் பாகத்தை மார்வல் நிறுவனம் தயாரிக்கும் என அனைவரும் நம்பினர்.
டாம் ஹாலேண்டின் நோ வே ஹோம் படத்தில் ஜெண்டையா, பெனடிக்ட் கம்பர்பேட்ச், ஜேமி ஃபாக்ஸ், டோபி மெக்வையர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் க்ளைமேக்ஸ் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தும் அளவிற்கு இருந்தது. படத்தின் நாயகியான எம்.ஜே, பீட்டர் பார்க்கரை முழுமையாக மறந்து போவது போல அந்த க்ளைமேக்ஸ் இடம் பெற்றிருந்தது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள், ஸ்பைடர் மேனின் நான்காம் பாகத்தை விரைவில் வெளியிடுமாறு கோரிக்கை வைத்தனர். இருந்தாலும், அந்த படம் குறித்த அப்டேட்டுகள் எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது, மார்வல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபீஜ் ஒரு பேட்டியில் ஸ்பைடர் மேனின் நான்காம் பாகத்திற்கான கதை எழுதம் பணி தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
டோபி மெக்வையர், நோ வே ஹோமில் நடித்ததிலிருந்து, அவரும் ஸ்பைடர் மேன் படத்தின் நான்கு மற்றும் ஐந்தாம் பாகங்களில் நடிக்க இருப்பதாக பேச்சுு அடிப்பட்டது. ஆனால், அது குறித்த எந்த தகவலும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை. அவர் ஸ்பைடர் மேனாக நடிக்க இருந்த நான்காம் பாகம் குறித்தும் கெவின் ஃபெஜ் பேசினார். அப்போது, அது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.
ஸ்பைடர் மேன் 4 குறித்த தகவல் வந்ததும், மார்வல் ரசிகர்கள் பயங்கர குஷியாகி விட்டனர். இதனால், மார்வல் படம் குறித்த தகவல்களும் ஸ்பைடர் மேனின் நான்காம் பாகம் குறித்த தகவல்களும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.