SPB Birth Anniversary:இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... பாடும் நிலா எஸ்.பி.பி பிறந்தநாள் இன்று
HBD SP Balasubrahmanyam: பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம்(SP Balasubrahmanyam) முதன் முதலில் 1966-ஆம் ஆண்டு சிறீ சிறீ சிறீ ராமண்ணா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். தமிழில் இவர் முதன்முதலில் ஓட்டல் ரம்பா என்ற திரைப்படத்திற்கான பாடி இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாகவில்லை. எம்.ஜி.ஆரின் அடிமைப்பெண் திரைப்படத்தில் இவர் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல் தான் முதலாவதாக வெளியானது. இவர் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். இதன் மூலம் இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
6 முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றிருக்கிறார் எஸ்.பி.பி. இதுவரை தேசிய விருதினை 4 மொழிகளுக்கு பெற்ற ஒரே திரைப்பட பாடகர் எஸ்.பி.பி. தான். மேலும் இவர் ஏராளமான மாநில அளவிலான விருதுகள் உள்ளிட்டவற்றை வென்று குவித்துள்ளார். மேலும் 16 இந்திய மொழிகளில் இவர் பாடல்களை பாடியுள்ளார் எஸ்.பி.பி
எஸ்.பி.பியின் வெற்றிக்கு காரணம், இசையின் மீது அவர் கொண்ட காதல் தான். அனைத்து பாடகர்களுமே சிறந்த பாடர்கர்கள் தான் என்றாலும் இவர் தனித்து நிற்க ஒவ்வொரு பாடலுக்கும் இவர் மெனக்கிடுவது தான்.
தமிழில் பல்வேறு இசையமைப்பாளர்களின் முதன்மையான சாய்சாக இருந்தவர் எஸ்.பி.பி தான். அதற்கு காரணம் திரைப்படத்தில் அந்த பாடலை கதாபாத்திரம் எந்த சூழலில் இருந்து பாட வேண்டும் அதற்கான மாயஜாலத்தை, தனித்துவத்தை தன் ஒவ்வொரு பாடலிலும் எஸ்.பி.பி வெளிப்படுத்தி இருப்பார்.
உற்சாகம், சோகம், காதல் என அனைத்தையும் தன் குரலிலேயே வெளிப்படுத்தும் வித்தகர். அதனால் தான் இவர் ஏராளமான இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களின் விருப்பமான பாடகராக இருந்தார். இவர் குரலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.
ரஜினி நடிப்பில் வெளியான வீரா என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கூட தென்றல் மலர்கள் ஆட என்ற பாடல் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் குரலில் வெளியான கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல். அதற்கு இசை மட்டும் அல்ல எஸ்.பி.பியின் வசிய குரலும் தான் காரணம் .
அமர்க்களம் படத்தில் இடம் பெற்ற சத்தமில்லாத தனிமை கேட்டேன் பாடலை எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்தார். ஒரு குழந்தையின் தனிமையையும் ஏக்கத்தையும், ஆசையையும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய பாடல் இது. இந்த பாடலை மிக அருமையாக பாடி இருப்பார் பாடும் நிலா.
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் எஸ்.பி.பி பாடி இருப்பார். தன் காதலை ஏற்பாயா என சோகம் கலந்த ஏக்கத்தோடு கதாநாயகன் இந்த பாடலை பாடுவதாய் காட்சி. எஸ்.பி. தன் குரலில் காதலையும் ஏக்கத்தையும் சோகத்தையும் இசைக்கு ஏற்றார் போல் மிக அழகாக தன் குரலில் வெளிப்படுத்தி இருப்பார்.
தன் குரலிலே மாயாஜாலம் செய்து பாடலை கேட்பவர்களை தன் வசப்படுத்தும் வித்தகர் பாடுநிலா எஸ்.பி.பியின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறது ஏபிபி நாடு.