Lakshmi Ramakrishnan: நாங்க அவரோட திறமைய ரசிச்சோம்.. வைரலான லாரன்ஸ் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்!
இணைய சமூகமே வலைவீசித் தேடிவரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ லாரன்ஸ் குறித்து இயக்குநர், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியுள்ளார்.
சொல்வதெல்லாம் உண்மை லாரன்ஸ்
சமீப காலமாக ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ் என்பவரின் காணொளிகள் படுவைரலாகி வந்தன. 9 ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லாரன்ஸ் “மேடம் இது நடிப்பு மேடம்” சில்லு சில்லு சில்லுனு நடப்பான்” என்று அவர் பேசிய அனைத்தும் இணையதளத்தில் மீம்ஸ்களாக, ரீல்ஸ்களாக பகிரப்பட்டு வந்தன.
இப்படி அனைவரும் பேசி வந்த அந்த நபர் இறந்துவிட்டதாக திடீரென்று ஒரு தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் லாரன்ஸை தேடும் வேட்டையில் இறங்கினார்கள். கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக இருந்த லாரன்ஸை கடந்த 2 ஆண்டுகளாக யாரும் பார்க்கவில்லை என்று அனைவரும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில் லாரன்ஸ் தற்போது உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அவர் அல்லது அவரது குடும்பத்தினர் யாராவது உறுதிப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
‘அவரை நாங்க ரசிச்சோம்’
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் லாரன்ஸ் பங்கேற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன். லாரன்ஸ் குறித்து பேசிய அவர் இப்படி கூறியுள்ளார். “நான் எத்தனையோ குற்றவாளிகளுடன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசியிருக்கிறேன்.
சிலர் 4 கொலைகளை செய்துவிட்டு என் முன் கேஷுவலாக பேசிக் கொண்டிருப்பார்கள். படித்தவர்களை விட படிக்காதவர்களிடம் நிறைய திறமைகளும் ஹ்யூமர் சென்ஸும் இருக்கு. ஒருத்தரின் ஒரு கோணத்தை மட்டும் வெளிப்படுத்தாமல், அவருடைய பிற கோணங்களையும் வெளிப்படுத்த இந்த நிகழ்ச்சியில் நாங்கள் அனுமதித்தோம். அதன் வெளிப்பாடு தான் லாரன்ஸ்.
அன்று லாரன்ஸ் வந்தது இன்று வரை எனக்கு நினைவு இருக்கிறது. அவருக்குள் அப்படி ஒரு காமெடி சென்ஸ். அதனால் தான் அவர் பேசினாலும் ஆக்ஷன் செய்தாலும் அதை அனுமதித்தோம். அவரோட திறன் வெளியே தெரிய வேண்டும் என்று நினைத்தோம். அதனால் தான் அவற்றை எடிட் செய்யாமல் அப்படியே ஒளிப்பரப்பினோம். நாங்கள் நினைத்திருந்தால் அந்தப் பகுதிகளை நீக்கியிருக்கலாம். அவர் தப்பு செய்துவிட்டு வந்திருந்தாலும் அவருடைய திறமையை நாங்கள் ரசிக்கவே செய்தோம்.
அதே நேரத்தில் நாங்கள் அவர் செய்த தப்பை நியாயப்படுத்தவும் இல்லை. அவருக்கு இருந்த திறமைக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்திருந்தால் அவர் பெரிய நகைச்சுவை நடிகராக வந்திருப்பார். அவருக்குள் அப்படி ஒரு திறமையை நாங்கள் பார்த்தோம். எங்கள் நிகழ்ச்சிக்கு வருபவர்களை நிகழ்ச்சி முடிந்ததும் அப்படியே நாங்கள் அனுப்பி விடுவது இல்லை. அவர்களின் தேவைகளையும் வறுமையையும் புரிந்துகொண்டு அதற்கான உதவிகளையும் செய்து தான் அனுப்பி வைக்கிறோம்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.