''கண்ணாலயே மிரட்டுவாரு.. அதெல்லாம் எனக்கு வராது..'' மலையாள நடிகரை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்!
மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார் பஹத் பாசில். நடிகை நஸ்ரியாவின் கணவராக தமிழில் அறியப்பட்ட பஹத்துக்கு தற்போது தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கோலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். காமெடி ட்ராக்கில் சினிமாவை தொடங்கினாலும் அடுத்தடுத்த படங்களில் மாஸ் ஹீரோ என தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். சமீபத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த குஷியில் இருக்கிறார் சிவா. சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தைத் தொடர்ந்து டானும் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் வெற்றியை படக்குழுவினர் முன்னதாக கேக் வெட்டிக் கொண்டாடினர். டான் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் படங்களின் லிஸ்டிலும் இணைந்தது.
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோர் டான் படத்தில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்கி இருந்தார். 100 கோடி வசூல் குறித்து பதிவிட்டிருந்த இயக்குநர் ”கனவுகள் நனவாகின்றன, இதனை நிகழ்த்திக் காட்டிய பார்வையாளர்களுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டு மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். இந்நிலையில் டான் வெற்றி குறித்தும், தன்னுடைய அடுத்தப்படம் குறித்தும் நடிகர் சிவகார்த்திகேயன்,கிரிக்கெட் வீரர் அஷ்வினின் யூடியூப் சேனலுக்காக பேசினார். அப்போது பல விஷயங்களை பேசிய சிவகார்த்திகேயன், விக்ரம் படத்தில் பட்டையைக் கிளப்பிய மலையாள நடிகர் பஹத் குறித்தும் பேசினார். அதில், நடிப்பதற்காக பஹத் பெரிய கெட்டப் எல்லாம் போடுவதில்லை. அசால்டாக கண்ணில் எக்ஸ்பிரஸனைக் காட்டி நடித்து மிரட்டிட்டு போய்டுவாரு. அதெல்லாம் எனக்கு சுத்தமா வராது. நான் ரசிக்கும் மற்றொரு நடிகர் பஹத் பாசில் என்றார்.
View this post on Instagram
மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார் பஹத் பாசில். நடிகை நஸ்ரியாவின் கணவராக தமிழில் அறியப்பட்ட பஹத்துக்கு தற்போது தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. காரணம் அவரின் நடிப்பு. தன்னுடைய கண்கள் மூலமே தான் நடிக்கும் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு கடத்திவிடும் விவரம் தெரிந்தவராக இருக்கிறார் . மலையாளத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த பஹத் வேலைக்காரன் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் சூப்பர் டீலக்ஸ் படத்திலும் நடித்தார். இரண்டு படங்கள் நடித்திருந்தாலும் விக்ரம் படம்தான் பஹத்தின் நடிப்புப்பசிக்கு தீனி போடும் படமாக அமைந்துள்ளது.