மதராசி படத்திற்கு கேம் ஓவர்...பட்ஜெட் எவ்வளவு ? வசூல் எவ்வளவு? ரிசல்ட் தெரிஞ்சது தான்
Madharaasi Collection : சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் 12 ஆவது நாளாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் வசூல் தகவலைப் பார்க்கலாம்

அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. குறைவான ப்ரோமோஷன் , கலவையான விமர்சனங்கள் என இப்படத்தின் தோல்விக்கு ஒருசில காரணங்களை குறிப்பிடலாம். முதல் வாரத்தில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற மதராஸி முதல் திங்கள் கிழமையில் இருந்தே வசூலில் சரிவை சந்திக்கத் தொடங்கியது. தற்போது திரையரங்கில் 12 ஆவது நாளாக ஓடிக்கொண்டிருக்கும் மதராஸி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் ஒட்டுமொத்த வசூல் பற்றிய தகவலைப் பார்க்கலாம்.
மதராஸி பட்ஜெட்
இந்தியில் சிகந்தர் படத்தின் தோல்விக்குப் பின் ஏ.ஆர் முருகதாஸ் தமிழில் இயக்கிய படம் மதராஸி. ஶ்ரீ லக்ஷ்மி மூவிஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. ருக்மினி வசந்த் , வித்யுத் ஜம்வால் , விக்ராந்த் , பிஜூ மேனன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சுதீப் எளமன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் .கெவின் சண்டை காட்சிகளை இயக்கியுள்ளார்.
அமரன் திரைப்படம் ரூ 120 கோடி பட்ஜெட்டில் உருவானது. தற்போது மதராஸி படம் சிவகார்த்திகேயன் நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் என கூறப்படுகிறது. கொய்மொய் இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி சுமார் ரூ 180 கோடி பட்ஜெட்டில் மதராஸி திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருப்பதே இத்தனை பெரிய பட்ஜெட்டிற்கு காரணம். சிவகார்த்திகேயன் இப்படத்திற்கு 40 கோடி வரை சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பளத்தை அவர் மொத்தமாக வாங்காமல் படத்தின் வெற்றிக்குப்பின் லாபத்தில் ஷேராக வாங்கிக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார்.
மதராஸி வசூல்
மதராஸி திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ரூ 12.8 கோடி வசூலித்தது. உலகளவில் இரண்டு நாட்களில் படம் ரூ 50 கோடி வசூலித்ததாக படதயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டது. முதல் மூன்று நாட்களில் மூன்று இலக்கில் இருந்த வசூல் எண்ணிக்கை நான்காவது நாளில் இருந்து ஒற்றை இலக்காக மாறியது.
4 ஆவது நாளில் - ரூ 4.15 கோடி
5 ஆவது நாளில் ரூ 3.2 கோடி
6 ஆவது நாளில் ரூ 2.5 என குறைந்தது.
இரண்டாவது வாரத்தில் படம் நூறு கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த் நாளில் படத்தின் வசூல் சரியத் தொடங்கியது. திரையரங்கில் 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் மதராஸி திரைப்படம் உலகளவில் ரூ 77.25 கோடியும் , இந்தியளவில் 43.6 கோடியும் வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வார இறுதியோடு மதராஸி படத்தின் திரையரங்க ஓட்டம் முடிவுக்கு வந்து இறுதி வசூல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். ஆனால் தற்போதைய நிலவரப்படி மதராஸி சிவகார்த்திகேயனுக்கு தோல்விப் படமாகவே அமைந்துள்ளது





















