Singer sonu nigam: தமிழுக்கு ஆதரவாக இந்தியில் இருந்து ஒரு குரல்! இந்திக்கு எதிராக கொந்தளித்த பாலிவுட் பாடகர்!
மொழியை மற்றவர்கள் மீது திணித்து நாட்டில் ஒற்றுமையின்மையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம் என்று பாடகர் சோனு நிகம் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மொழியை மற்றவர்கள் மீது திணித்து நாட்டில் ஒற்றுமையின்மையை உருவாக்கிக்கொண்டிருக்கின்றோம் என்று இந்தி தேசிய மொழியா என்ற கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் சோனு நிகம். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அஜய் தேவ்கன் மற்றும் சுதீப்பின் ட்விட்டர் உரையாடலுக்குப் பின் ஹிந்தி தேசிய மொழியா என்பது பற்றிய விவாதம் நாடுமுழுவதும் எழுந்திருக்கிறது. தொடர்ச்சியாக இதுபற்றி திரைத்துறையினர் மட்டுமல்லாது, அரசியல் கட்சியினரும் பேசி வருகின்றனர். இந்நிலையில், பாடகர் சோனு நிகம் உடன் பீஸ்ட் ஸ்டுடியோஸின் சிஇஓ சுஷாந்த் மேத்தா உரையாடினார். அப்போது சோனு நிகமிடம் ஹிந்தி தேசிய மொழி விவகாரம் தொடர்பாக சுஷாந்த் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சோனு நிகம், “என்னுடைய அறிவுப்படி இந்தி தேசிய மொழி என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எங்குமே கூறப்படவில்லை. இது தொடர்பாக நிபுணர்களிடமும் விவாதித்துவிட்டேன். இந்தி நாட்டில் பெரும்பான்மையோரால் பேசப்படும் மொழி. அதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், தமிழ் மொழி தான் உலகிலேயே பழமையான மொழி என்பதை நாம் அறிவோமா? தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் இடையே விவாதங்கள் போய்க்கொண்டிருக்கின்றது. தமிழ் தான் உலகின் மிகவும் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறினார்.
Perfect response to Ajay Devgn by Sonu Nigam: Let's not divide people further in this country, where is it written that Hindi is our national language? 👏 pic.twitter.com/hC9nHbXJHy
— Sushant Mehta (@SushantNMehta) May 2, 2022
மேலும், நம் நாட்டில் குறைந்த பிரச்சனை தான் இருக்கிறது. அதனால் இன்னொரு பிரச்சனை நமக்குத் தேவையா? என்று கேள்வி எழுப்பிய அவர், மொழியை மற்றவர்கள் மீது திணித்து நாட்டில் ஒற்றுமையின்மையை உருவாக்குகிறோம். நீங்கள் ஒரு தமிழர்; நீங்கள் ஹிந்தி பேச வேண்டும் என்கிறோம். அவர்கள் ஏன் பேசவேண்டும்? எந்த மொழியை பேசவேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே இருக்கிறது. எல்லாவற்றையும் விடுங்கள். ஒரு பஞ்சாபி பஞ்சாபி மொழியை பேசவேண்டும். ஒரு தமிழர் தமிழ் மொழியை பேசவேண்டும். அவர்களுக்கு ஆங்கிலம் ஏதுவாக இருக்கிறது என்றால் அந்த மொழியில் பேசட்டும். நமது நீதிமன்றத்தின் தீர்ப்புகள் எல்லாம் ஆங்கிலத்தில் இருக்கின்றன. விமானப் பணிப்பெண்கள் ஆங்கிலத்தை பயன்படுத்துகின்றனர்” என்று கூறியிருக்கிறார் சோனு நிகம். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பாடகர் மற்றும் இசையமைப்பாளரான சோனு நிகம் 32 மொழிகளில் பாடல்களைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.