Silambarasan TR: ‛படம் பிடிச்சா ஏன் புறக்கணிக்கப் போறாங்க...’ -ஒப்புக்கொண்ட சிம்பு!
சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”.
இந்திய சினிமாவில் நடந்து வரும் புறக்கணிப்பு கலாச்சாரம் குறித்து நடிகர் சிலம்பரசன் பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதியான இன்று தியேட்டர்களில் வெளியானது.
வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.நள்ளிரவு முதலே சிம்புவின் ரசிகர்கள் தியேட்டர்களில் குவியத் தொடங்கினர். விடிய விடிய ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக காலை முதல் காட்சிக்காக காத்திருந்த நிலையில், இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின.
View this post on Instagram
மேலும் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்பு, கௌதம் மேனனுக்கு கம்பேக் கொடுக்கும் படமாக வெந்து தணிந்தது காடு அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர். இதனிடையே நடிகர் சிலம்பரசன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்திய சினிமாவில் நடந்து வரும் புறக்கணிப்பு கலாச்சாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் எந்தவொரு திரைப்படத்தின் தலைவிதியையும் அதன் கதை தான் தீர்மானிக்கிறது. ஒரு நல்ல படத்தை யாரும் புறக்கணிக்க மாட்டார்கள் என்பதால் இந்த விஷயத்தில் பார்வையாளர்களை குறை சொல்லக்கூடாது.
அதே நேரத்தில் மோசமான கதையை நிராகரிக்க பார்வையாளர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலத்தின் வெற்றியைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். இதன்மூலம் உண்மையிலேயே நல்ல கதையை கொடுத்தால் மக்கள் கொண்டாடுவார்கள் என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு படத்திற்கும் அதன் சொந்த விதி ஒன்று இருப்பதாக தான் நம்புகிறேன் என சிம்பு தெரிவித்துள்ளார்.
இந்த புறக்கணிப்பு கலாச்சாரம் என்பது பாலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதனால் பல முன்னணி நடிகர்களின் படங்கள் போதிய வரவேற்பு பெறாமல் வசூலில் மரண அடி வாங்கி வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் அந்த திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.