மனோஜ் இறந்த 3 மாதத்தில்... பாரதிராஜா குடும்பத்தில் ஏற்பட்ட மற்றொரு மரணம்! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!
கடந்த மார்ச் மாதம், பாரதிராஜாவின் ஒரே மகன், மனோஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு மரண சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமத்து கலாச்சாரங்களையும், பழக்க வழக்கங்களையும் தன்னுடைய திறமையான இயக்கம் மூலமாக கண் முன் நிறுத்தியவர் பாரதிராஜா. '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, முதல் படத்திலேயே ரஜினி - கமல் என இரு பிரபலங்களை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர். அதே போல் இந்த படத்தில் மயிலு கதாபாத்திரத்தில் மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி நடித்திருந்தார். முதல் படைப்பிற்காகவே சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.
இதன் பின்னர் இவர் இயக்கிய பல படங்கள் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை படைத்தன. திரையுலகில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும், இவரது படைப்பாற்றல் இவரை முன்னணி இயக்குனராக மாற்றி அழகு பார்த்தது. எனவே தன்னுடைய மகன், மனோஜ் பாரதி ராஜாவுக்கு திரைப்பட இயக்கம் மீது ஆர்வம் இருந்த போதிலும் அவரை தான் இயக்கிய 'தாஜ் மஹால்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த படம் விமரிசன ரீதியாக பாராட்டை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் மனோஜ் பாரதிராஜா நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. ஒரு கட்டத்தில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் மனோஜ் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் 'மார்கழி திங்கள்' என்கிற ஒரே ஒரு படத்தை மட்டுமே இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாமல் போனதால்... அடுத்த படத்தின் கதை இருந்தும், தயாரிப்பாளர் கிடைக்காமல் போனது.

மனோஜ் பாரதிராஜாவுக்கு உடலில் சில பிரச்சனைகள் இருந்த போதும் அதற்க்கு அவர் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. நிறைய சொத்துக்கள் இருந்த போதும், பண ரீதியாக அதிக சிரமங்களை அவர் சந்தித்து வந்ததாகவும் சிலர் கூறினர். ஏற்கனவே இதயத்தில் இருந்த பிரச்சனைக்காக மனோஜுக்கு ஸ்டண்ட் வைக்கப்பட்டிருந்த நிலையில், மனோஜுக்கு திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இவரது மறைவு ஒட்டு மொத்த தமிழ் திரையுலக ரசிகர்களையும், பிரபலங்களையும் உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மகனின் மறைவுக்கு பின்னர் பாரதி ராஜாவும் மிகவும் நொடிந்து போனார். தற்போது அவரும் உடல் நல பிரச்சனைக்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான்... பாரதிராஜவின் மூத்த சகோதரி தங்கத்தாய் (95) உடல்நல குறைவு காரணமாக தேனியில் உயிரிழந்துள்ளார். அக்கா மீது அதீத பாசம் கொண்ட பாரதி ராஜாவை நிலைகுலைய செய்துள்ளதாம். மேலும் தற்போது வெளிநாட்டில் உள்ளதால் அவரால் சகோதரியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மனோஜ் உயிரிழந்து 3 மாதமே ஆகும் நிலையில்... தற்போது தங்கத்தாய் உயிரிழந்துள்ளதால் பாரதி ராஜாவின் குடும்பமே கண்ணீரில் மூழ்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















