”மணிகண்டன் நமக்கு கிடைத்த மற்றுமொரு பாலுமகேந்திரா “ - கடைசி விவசாயி குறித்து சீமான் !
விஜய் சேதுபதி நிறைய வணிகம் சார்ந்த திரைப்படங்களில் நடித்தாலும் , அவர் நேசித்து வந்த சினிமாவிற்காக இப்படியான படங்களை , திருப்திக்காக செய்கிறார்.
காக்கா முட்டை என்னும் வெற்றிபடத்தை கொடுத்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் தடம் பதித்தவர் மணிகண்டன் . இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது திரைத்துறையினரும் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் இயக்குநர் மிஷ்கின், கடைசி விவசாயி இயக்குநர் மணிகண்டனின் வீட்டிற்கே சென்று அவரை ஆரத்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணப்பாளர் சீமான் , திரைப்படம் குறித்தும் இயக்குநர் மணிகண்டன் குறித்தும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
View this post on Instagram
அதில் “ அறிவு என்பது வேறு , ஞானம் என்பது வேறு. இந்த படத்தை பார்ப்பதற்கு ஞானம் வேண்டும் . உணர்ந்துதான் தெளியணும். அப்படி ஒரு பதிவாக இருக்கு இந்த திரைப்படம் . நம் பாரம்பரிய விதைகளை தொலைத்துவிட்டோம். உணவு மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது. அப்படி வர்த்தக மயமாக்கப்பட்ட உலகத்தில் நமது கலாச்சாரம் , பண்பாடு , வாழ்வியல் எப்படி சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதை இரண்டரை மணி நேரத்தில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். வழக்கமான சினிமாவை இந்த படத்தில் நீங்கள் பார்க்க முடியாது. இந்த படத்தில் நடித்திருக்கும் விவசாயிக்கு செவி கேட்கும் திறன் கிடையாது. ஆனால் நேரடி களப்பதிவாகத்தான் இந்த படத்தை பார்க்கிறேன். ஹாலிவுட்டில் எல்லாம் விருதுகளுக்காக இப்படி நேரடியாக படங்களை எடுப்பார்கள். அதுபோல புதுமுகங்கள் இத்தனி நேர்த்தியா நடித்திருக்கிறார்கள். இதை மற்ற படங்கள் போல நினைக்காமல் இது ஒரு வாழ்வியலாக நினைத்து சொந்தங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். மணிகண்டனை பார்க்கும் பொழுது பாலுமகேந்திரா கதை , திரைக்கதை , ஒளிப்பதிவு அந்த நேர்த்தியை இவரின் படங்களிலும் பார்க்க முடிகிறது. இவர் இந்த காலத்தில் கிடைத்திருப்பது அரிதான ஒன்று. அவரை ஊக்கப்படுத்துவது நம் கடமை . விஜய் சேதுபதி நிறைய வணிகம் சார்ந்த திரைப்படங்களில் நடித்தாலும் , அவர் நேசித்து வந்த சினிமாவிற்காக இப்படியான படங்களை , திருப்திக்காக செய்கிறார். அவருக்கும் எனது பாராட்டுக்கள். இந்த படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எனது நம்பிக்கை“ என தெரிவித்துள்ளார்.