Nandhan: நந்தன் சொல்லும் வலி! தாழ்த்தப்பட்டவர்களுக்கு எளிதில் கிட்டிவிடுகிறதா அதிகாரம்?
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அவலத்தையும், பிற சமூகத்தினரில் சிலரால் அவர்கள் நடத்தப்படும் விதத்தையும் வலியுடன் சொன்ன நந்தன் படம் அமேசானில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் திரையுலகம் எத்தனையோ வணிக ரீதியான, நாயக தரிசன படங்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தாலும் சமூகத்திற்கு தேவையான, சமூகத்தில் தொடர்ந்து நடக்கும் அவலங்களை தோலுரித்துக் காட்டும் அக்கறை மிகுந்த படங்களையும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
நந்தன் தந்த வலி:
அந்த வகையில் நடப்பாண்டில் வெளியான சமூக அக்கறை மிகுந்த படம் நந்தன். சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக இயக்குனர் – நடிகராக அறிமுகமான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படம் இன்றும் பட்டியலின மக்கள் உயர் பதவிக்குச் செல்லும்போது அவலத்தையும், அதையும் மீறி பதவிக்குச் சென்றால் பிறரின் கைப்பாவையாக ஆட்டிவிக்கப்படுவதையும் அப்பட்டமாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக அமைந்துள்ளது.
ரிசர்வ்ட் தொகுதியாக அறிவிக்கப்பட்ட ஒரு ஊராட்சி மன்றத்தின் தலைவராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டாலும், அவரை உயர் சமூகம் என குறிப்பிடப்படும் சமூகத்தைச் சேர்ந்த சிலர் எவ்வாறு நடத்துகின்றனர்? அந்த பதவியில் அவரை செயல்படவே விடாமல் எவ்வாறு தடுக்கின்றனர்? என்பதை மிகவும் யதார்த்தமாக காட்டியுள்ளது.
இன்னமும் நடக்கிறதா?
இன்றும் இதெல்லாம் நடக்கிறதா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு படத்தின் தொடக்கத்திலே பதில் தரும் விதமாக கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவதற்கு தயார் என்று இயக்குனர் இரா.சரவணன் டைட்டில் கார்டாக போட்டதும், படத்தின் இறுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தாங்கள் எதிர்கொண்ட இன்னல்களை கண்ணீருடன் எடுத்துரைத்ததுமே எத்தனை சமூக நீதிகளை ஓங்கி உரைத்தாலும் இன்னும் பலரின் மன நிலை மாறவில்லை என்பதை நமக்கு பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
நந்தன் படத்தில் காட்டுவது இன்னும் நடக்கிறது என்பதற்கு மற்றொரு சான்றாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு செஞ்சி அருகே உள்ள ஆனாங்கூர் கிராமத்தில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவி தன்னை ஊராட்சி மன்ற அலுவலக இருக்கையில் அமரவிடாமல் ஊராட்சி மன்ற துணைத் தலைவியும், அவரது கணவரும் தடுப்பதாகவும், தன்னை பணி செய்ய விடாமல் இடையூறு செய்வதாகவும் தர்ணாவில் ஈடுபட்டதே இந்த சமூகத்தில் இந்த அவலம் இன்னும் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு மற்றொரு வேதனையான உண்மை ஆகும்.
காலனி, கீழத்தெரு
இந்திய அரசியலமைப்பை எழுதி இந்த நாட்டையே சரியான பாதையில் வழி நடத்தி வரும் அம்பேத்கர் உலகம் போற்றும் மாமேதை என்று உலகளாவிய அறிஞர்கள் கொண்டாடி வரும் அதேசூழலில், அம்பேத்கரை ஒரு சாதிய தலைவரைப் போல அம்பேத்கரை கொண்டாடுபவர்கள் என்றாலே அவரை முகம் சுழித்து பார்க்கும் ஒரு கூட்டமும் இன்றும் இந்த தமிழ்நாட்டில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
நந்தன் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பாட்டி அந்த காலத்துல வெள்ளை வேட்டி கட்டியதற்காக என் புருஷனை வெட்டிக்கொன்றார்கள் என்று கூறுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் பல பகுதிகளில் இன்னும் காலனி என்று கூறினாலோ, கீழத் தெரு என்று கூறினாலே அவர்களை வித்தியாசமாக அணுகும் மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை முற்றிலும் மறுக்க யாராலும் முடியாது.
மேலவளைவு முருகேசன் படுகொலை:
அது போன்ற சம்பவம் தமிழ்நாட்டின் பல ஊர்களிலும் பல காலங்களாக அரங்கேறியுள்ளது. இன்றும் சில ஊர்களில் இந்த ஏற்றத்தாழ்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டையே உலுக்கிய மேலவளைவு முருகேசன் கொலை செய்யப்பட்ட சம்பவமே சாதி வெறியின் உச்சம் எந்தளவு இருந்தது என்பதற்கு சான்றாகும்.
1997ம் ஆண்டு கிராம ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகேசன் பஞ்சாயத்து தலைவரானதை ஏற்றுக் கொள்ள முடியாமல் முருகேசன் உள்பட 7 பேரை மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொன்றது இன்றும் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியே ஆகும்.
அதிகாரத்திற்கு எளிதில் வர முடியுமா?
சமூக நீதியையும், சமத்துவத்தையும் போற்றும் வகையில் பல கட்சிகளும், அரசும் மாறி, மாறி பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், குடியரசுத் தலைவர் போன்ற அலங்கார பதவியில் அமரவைக்கப்பட்டு அழகு பார்க்கப்பட்டாலும் அதிகாரமிக்க பதவியான பிரதமர், முதலமைச்சர் போன்ற உச்சபட்சம் பெற்ற அதிகாரமிக்க பதவிக்கு ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எளிதில் வர முடியுமா? என்பது கேள்விக்குறியே ஆகும்.
அதையும் மீறி அவர்கள் பதவிக்கு வந்தாலுமே அவர்களால் முழு சுதந்திரத்துடன், வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்ற முடியுமா? என்பது கேள்விக்குறியே ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்த இத்தனை ஆண்டுகளில் ஒரு முறை கூட ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கூட பிரதமர் ஆனதில்லை. குடியரசுத் தலைவர் பதவியில் ஆர்.கே.நாராயணன், ராம்நாத் கோவிந்த் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இருவரும், திரௌபதி முர்மு என்ற பழங்குடியின பெண் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.
எத்தனை முதலமைச்சர்கள்?
நாட்டில் 28 மாநிலங்கள் இருந்தும், இந்த மாநிலங்கள் எத்தனையோ சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டாலும் இதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர் மட்டுமே முதலமைச்சராக தேர்வாகியுள்ளனர். ஆந்திராவில் தாமோதரம் சஞ்சீவய்யா, பீகாரில் ராம் சுந்தர் தாஸ், பீகாரில் போலா பஸ்வான் சாஸ்திரி, ராஜஸ்தானில் ஜெகன்னாத் பகாடியா, உத்தரபிரதேசத்தில் மாயாவாதி, பஞ்சாபில் சரண்ஜித்சிங் சன்னி ஆகியோர் மட்டுமே முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டிலும் இந்த நிலையா?
இவர்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் முதலமைச்சர் மாயாவதி மட்டுமே ஆவார். இதில், வருந்தக்கூடிய விஷயம் என்னவென்றால் இட ஒதுக்கீடு, சமூகநீதிக்கு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழ்நாட்டில் இருந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தது இல்லை.
இந்தியாவின் உச்சபட்ச அதிகார அமைப்பாகவும். எளிய மக்களின் கடைசித நம்பிக்கையாகவும் கருதப்படும் உச்சநீதிமன்றத்திற்கு இதுவரை கே.ஜி.பாலகிருஷ்ணன் என்ற ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் மட்டுமே தலைமை நீதிபதியாக பதவி வகித்துள்ளார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டுமென்றால் பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகம், தங்களுக்கு என்று ஆங்கிலேயர்களால் ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பிறரால் பறிக்கப்பட்டது கூட அறியாத ஒரு சமூகமாக திகழ்ந்தவர்களின் வளர்ச்சிக்காக தமிழக அரசால் ஆதிதிராவிட, மலைவாழ், பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலத்துறை அரசின் அமைச்சரவை பட்டியலில் கடைசி இடத்திலோ அல்லது கடைசி இடத்திற்கு முந்தைய இடத்திலோ இருப்பதே ( யார் ஆட்சியில் இருந்தாலும்) அந்த துறைக்கு தரப்படும் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
உரக்கச் சொல்ல முடியுமா சாதியை?
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி அவர்களை வளர்ச்சிப்பாதைக்கு அழைத்துச் சென்றாலும், அந்த இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் கூட்டமும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களை தனக்கு நிகராக கருத மறுக்கும் கூட்டமும் இன்னும் விஷக்கிருமியாக இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதையே நந்தன் மிக ஆழமாக நமக்கு ஞாபகப்படுத்துகிறான்.
ஒரு BC, MBC, OBC பட்டியலில் உள்ள சமூகத்தினர் தங்கள் சாதியை தயக்கமின்றி சொல்வது போல SC/ST சமூக மக்களால் அனைத்து இடங்களிலும் எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக தங்கள் சாதியை கூற இயலாமல் தயங்குவதே இன்னும் அவர்களை சமமாக கருத பலரும் மறுக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
இன்னும் கொண்டாடியிருக்கலாம்:
இவர்கள் மத்தியில் இவர்களுக்கு நிகரான மனிதனாக வாழ்வதற்கு கல்வி மட்டுமே ஆயுதம் என்பதையும் வசனமாக நந்தன் படத்தில் காட்டியிருப்பார்கள். சக மனிதனை சம மனிதனாக பார்க்கும் எண்ணம் அனைவருக்கும் பிறக்காத வரை, நந்தனாகவே பலரும் வாழும் அவலமும் இந்த சமூகத்தில் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
ஒரு வேளை இந்த படத்தை மாரி செல்வராஜ், ரஞ்சித், வெற்றி மாறன் போன்ற இயக்குனர்கள் எடுத்திருந்தால் இந்த படத்தை இன்னும் பிரம்மாண்டமாக கோலிவுட் கொண்டாடியிருக்குமோ என்ற ஆதங்கமும் ஏற்படுகிறது. எளிய மக்களின் வலியை மிக ஆழமாகச் சொன்ன இந்த படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளம் காமெடி என்ற கேட்டகிரியில் வகைப்படுத்தப்பட்டிருப்பது இன்னும் வேதனையை ஏற்படுத்துகிறது. ஆனாலும், இந்த படத்தை திரையரங்கில் பெரியளவு கொண்டாடாவிட்டாலும் அமேசானில் பலரும் பார்த்து பாராட்டி வருகிறார்கள்.