Santhosh Narayanan Birthday: ’ஹேப்பி பர்த்டே ச.நா’ : சந்தோஷ் நாராயணன் எனும் இசை அசுரன்..
அட்டக்கத்தியில் ‘ஆசை ஓர் புல்வெளி’ மெலடியால் சந்தோஷ் நாராயணன் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தாலும், அதே படத்தில் வரும் 'வா ரூட்டு தல' இளைஞர்களின் ‘தக் லைஃப்’ பாடலாக நெஞ்சில் பதிந்தது.
இசை - இசை யாருக்குத்தான் பிடிக்காது? இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், யுவன், ஹாரீஸ் என ஒவ்வொரு இசையமைப்பாளரின் காலகட்டத்திலும் ஒவ்வொரு இசை நுணுக்கங்களை ரசித்திருக்கிறோம், ரசித்துக் கொண்டிருக்கின்றோம். ஹீரோக்களின் பெயர் சொல்லி மட்டுமா இங்கு ரசிகர் மோதல் இருக்கின்றது. இசையமைப்பாளர்களின் ரசிகர்களிடம் கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பாருங்கள், அதிரடி சண்டையாக மாறிவிடும். ஏனென்றால், பெரும்பாலும் கோலிவுட்டில் இசையமைத்த ஒவ்வொரு இசையமைப்பாளரும் தனக்கான முத்திரையை பதித்துவிட்டு செல்கிறார்கள். எந்நேரத்திற்கும், எந்த சூழ்நிலையிலும் நம்மை ஆசுவாசப்படுத்தி கொள்ள இங்கே அத்தனை பாடல்கள் குவிந்துகிடக்கின்றன.
அந்த வரிசையில், நீயா நானா என்ற சண்டைக்குள்ளோ, பிடிச்சிருக்கு பிடிக்கல என்ற விவாததிற்குள்ளோ அடங்காமல், தமிழ் இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அசாதாரணன்தான் சந்தோஷ் நாராயணன். அட்டக்கத்தியில் ‘ஆசை ஓர் புல்வெளி’ மெலடியால் சந்தோஷ் நாராயணன் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தாலும், அதே படத்தில் வரும் 'வா ரூட்டு தல' இளைஞர்களின் ‘தக் லைஃப்’ பாடலாக நெஞ்சில் பதிந்தது. அதே போல, பீட்சாவில் ‘மோகத்திரை’யில் காதலர்களின் ஃபேவரைட்டான சந்தோஷ், ‘ராத்திரியை ஆளும் அரசன்’ வழியே இன்சோம்னியாக்களை ராப் பாட வைத்தார். மனிதன் படத்தில், 'பொய் வாழ்வா' என மனமுடைந்து போனாலும் 'முன் செல்லடா முன்னே செல்லடா' என தைரியத்தையும் கொடுத்தார்.
இந்த 2011- 2021 காலத்தில் காதலித்தவர்களுக்கு தெரிந்திருக்கும், அவர்கள் அதிகபடியான காதல் பாடல்களை பகிர்ந்து கொண்டது சந்தோஷ் நாரயாணனின் பாடல்களாகத்தான் இருக்குமென்று! குக்கூவில் ‘ஆகசத்த நான் பாக்குறேன்’, மெட்ராஸில் 'நான் நீ நாம் வாழவே', எனக்குள் ஒருவனில் 'பூ அவிழும் பொழுதில்', இறுதி சுற்றில் 'ஏ சண்டக்காரா', மனிதனில் 'அவள் குழல் உதித்திடும்', கபாலியில் 'வானம் பார்த்தேன்' மற்றும் 'மாய நதி', மேயதா மான் படத்தில் 'மேகமோ அவள்', வட சென்னையில் 'கார்குழல் கடவையே' என சந்தோஷின் காதல் பாடல்களின் லிஸ்ட் இன்னும் நீண்டு செல்லும். காதல் பாடல்கள் ஷேரிங்கில் சந்தோஷ் பாடல்களுக்கு என்றும் தனி இடம் உண்டு.
ஜிகர்தண்டாவில் வரும் கண்ணம்மாவிற்கும், காலாவில் வரும் கண்ணம்மாவிற்கும் அத்தனை வித்தியாசங்கள். இரண்டு கண்ணம்மா பாடல்களுக்கும் மத்தியில் இவர் இசையமைத்திருக்கும் அத்தனை அத்தனை பாடல்களுக்கென தனி ப்ளேலிஸ்ட் போட்டு “இசை ராத்திரியை ஆளும் அரசனாக” ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
பெரிய ஹீரோ படம் என்பதால், பைரவா படத்தில் அவரது இயல்பான இசை ஸ்டைலில் இருந்து சற்று விலகினாரோ என தோன்றினாலும், தனது அடுத்தடுத்த படங்களில் மீண்டும் சந்தோஷ் நாராயணின் டிராக் சரியாக ஓட ஆரம்பித்தது. பைரவா படத்திலும் 'நில்லாயோ' பாடலில் சந்தோஷ் டச். வெறும் காதல் பாடல்களால் மட்டுமே ஒரு “இசையமைப்பாளரின் எரா” உருவாகிடுமா என்ன? இல்லை இல்லை. மெலடி, கானா, குத்து என சந்தோஷ் நிறைய ‘explore’ செய்திருக்கிறார், செய்து கொண்டிருக்கிறார்.
மெட்ராஸில் வரும் 'சென்னை வட சென்னை', எனக்குள் ஒருவனில் 'பிரபலமாகவே பிறந்த ஆளடா', இறுதிச்சுற்றில் 'போடா போடா'. இறைவியில் 'மனிதி', ஜிப்ஸி 'காத்தெல்லாம்' என இசை தேசாந்திரியாக தனது படைப்புகளை தந்து கொண்டிருக்கிறார் சந்தோஷ். அதனால்தான் என்னமோ, சந்தோஷ் இசையமைக்கும் ஆல்பங்களுக்கு எப்போதும் ஒரு எதிர்ப்பார்ப்பு உண்டு. அவற்றில் ஏதானும் ஒரு புதுமையை புகுத்திவிட முடியுமோ என்று அவர் மெனக்கெடுவதற்கு மக்கள் அளிக்கும் வரவேற்பே அதற்கான அங்கீகாரமாக அமைந்துவிடுகிறது.
என்னடி மாயாவி நீ என கண் கலங்க வைக்கவும், காகபோ என மனம் இளைப்பாறவும், புலி மாங்கா புலிப்போடு கொண்டாட்டம் தொடரவும் வாழ்த்துகள் ச.நா!