4 Years OF A1: ‘அச்சச்சோ அவரா.. ரொம்ப பயங்கரமானவராச்சே’.. சந்தானத்தின் சக்ஸஸ் ஃபார்முலா.. ஏ1 ரிலீசாகி 4 வருஷமாச்சு..
சந்தானம் நடிப்பில் வெளியான ஏ 1 திரைப்படம் வெளியாகி இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன
நகைச்சுவை நடிகராக உச்சத்தின் நின்றுகொண்டிருந்தார் சந்தானம். அறிமுக நடிகர் முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வரை கூட இருந்து நடித்துவிட்டார். ஒவ்வொரு படத்திற்கும் அவரது சம்பளம் உயர்ந்துகொண்ட தான் போகிறது. கூட்டமாக நான்கு நபர்கள் நின்று பேசினால் அங்கு சந்தானத்தின் ஒர் வசனமாவது நிச்சயம் பேசப்படும். இருந்தாலும் சந்தானத்தின் மனதில் ஒரு குறை. காலம் முழுவது காமெடியனாகத்தான் நடிக்க வேண்டுமா. ஏன் ஹீரோவாக நடிக்கக்கூடாதா? நடித்துப் பார்த்தால்தான் என்ன?
தில்லுக்கு துட்டு
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மூன்று பேரில் ஒரு ஹீரோவாக நடித்தார். ஆனால் படத்தின் உண்மையான கதாநாயகன் என்னவோ சேதுதான். அடுத்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் கதாநாயகனாக களமிறங்கினார் சந்தானம் . நகைச்சுவையாக சென்று கொண்டிருந்தவரை எல்லாம் நன்றாகத்தான் இருந்தது ஆனால் கடைசியில் கொஞ்சம் சென்டிமெண்டாக நடித்ததை தான் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இனிமேல் இப்படித்தான், தில்லுக்கு துட்டு என வரிசையாக தனது படங்களை தானே தயாரித்து நடித்தார். எல்லாப் படங்களிலும் இருந்த நகைச்சுவை நடிகனைத்தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். சில படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றாலும் சந்தானத்தை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள ரசிகர்களுக்கும் மனமில்லை. அவரும் இறங்கி வருவதாக இல்லை. கடைசியாக சரி ஆறு ரூபாய் என்ற வடிவேலு காமெடிபோல் இரு தரப்பும் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
ஏ1
ஜான்சன் இயக்கி, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து சந்தானத்தை களமிறக்கினார்கள். அதே நகைச்சுவை நடிகர்தான். ஆனால் இந்த முறை எல்லாருக்குமான ஹீரோவாக முயற்சி செய்யவில்லை அவர். முன்புபோல் பாலத்தில் இருந்து குதிப்பது சண்டை போட்டி ஹீரோயினை காப்பாற்றுவது என்று பெரிய பொய்களை நம்பவைக்க முயற்சிக்காமல் ஒரு சாதாரண சென்னை இளைஞன் ஒரு பிராமணப் பெண்ணைக் காதலிப்பதால் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு எளிமையான கதையை நகைச்சுவையாக சொல்லியது ஏ1.
சக்ஸஸ் காரணம் இதுதான்..
மற்ற படங்களில் செய்த ஒரு தவறு இந்தப் படத்தில் தவிர்க்கப்பட்டது. அது என்னவென்றால் இதுவரை தமிழ் சினிமாவில் உருவாகி வந்த அதே ஹீரோ இமேஜை தனக்கும் உருவாக்க நினைத்தார் சந்தானம். அதனால் தான் அஜித் அல்லது விஜய் நடித்த அதே மாதிரியான ஒரு எமோஷனலான காட்சியில் நம்மால் சந்தானத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த முறை தான் ஹீரோ தான் ஆனால் வழக்கமான எமோஷனல் கொஞ்சம் அதிரடி கொஞ்சமான ஹீரோவாக இல்லாமல் நகைச்சுவை கலந்த ஒரு ஹீரோவை தனது ஸ்டைலாக இந்தப் படத்தில் உருவாக்கினார் சந்தானம். இதுவே இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.
இந்த படத்தில் நடிகர் லொள்ளுசபா சேசு செய்த காமெடி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. வாழைப்பழத்தை கத்தி என குடிபோதையில் ஒருவரை குத்துவது, சந்தானம் குழுவிடம் சென்று, ’என்னை போய் வெளியே யார்டயாவது கேட்டிங்கன்னா..அச்சச்சோ அவரா ரொம்ப பயங்கரமானவர் ஆச்சே” என சொல்லும் டயலாக் வரை தியேட்டர்களில் மிகப்பெரிய அப்ளாஸ் பெற்றது காமெடி காட்சிகள்.
தனது கதாநாயகன் வாழ்க்கையில் ஏ 1 படத்தை மாதிரியாக வைத்து சந்தானம் ஒரு வெற்றிக்கான ஃபார்முலாவை இனிவரக்கூடிய படங்களுக்கும் கண்டுபிடிக்கலாம்.