Sana Khan: கண்கள் நீயே காற்றும் நீயே... குழந்தையை அறிமுகப்படுத்திய சனா கான்... இதயங்களை பறக்கவிடும் ரசிகர்கள்!
சிலம்பாட்டம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சனா கான், தனது கைக்குழந்தையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
சிம்பு நடித்த சிலம்பாட்டம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சனா கான். ஈ, தம்பிக்கு எந்த ஊரு, பயணம், தலைவன், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து பாலிவுட், கோலிவுட்டிலும் நடித்து கலக்கிய சனா கான், இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 6-இல் பங்கேற்றார். அதில், இரண்டாவதாக வந்த சனா கான், ரன்னராகி பல ரசிகர்களை பெற்றார்.
அதன்பின்னர், சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இருந்து விலகிய சனா கான், இஸ்லாம் மதத்தின் மீது தன்னை முழுவதுமாக ஈடுபடுத்தி கொண்டார். 2020ம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த முஃப்தி அனஸ் சயன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சனா கான், முழுவதும் தன்னை மாற்றி கொண்டார். சனா கானுக்கு திருமணமான செய்தி சமூக வலைதளத்தில் வைரலானது.
திருமணத்துக்கு பின் சமூக வலைதளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வரும் சனா கான், ரசிகர்களிடமும் உரையாடி வந்துள்ளார். தான் கருவுற்ற தகவலை சனா கான் கூறி இருந்த நிலையில், மும்பையில் நடந்த இஃப்தார் விருந்தில், சனா கானை அவரது கணவர் அனஸ் தர தரவென இழுத்து செல்லும் வீடியோ வைரலானது.
அதைப் பார்த்த ரசிகர்கள் கர்ப்பமான பெண்ணை இப்படியா இழுத்து செல்வது என கருத்து பதிவிட்டு இருந்தனர். அதற்கு விளக்கம் கொடுத்த சனா கான், கூட்டம் அதிகமாக இருந்தால் தான் மிகவும் சோர்ந்து போனதாகவும், கார் வந்ததும் தண்ணீர் குடிப்பதற்காகவும், காற்றோட்டமான இடத்துக்கு செல்வதற்காகவும் தன் கணவர் தன்னை அப்படி அழைத்துச் சென்றதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை பிறந்ததாக சனா கான் அறிவித்திருந்தார். சனா கானுக்கு வாழ்த்துகள் குவிந்த நிலையில், தற்போது குழந்தையை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
சனா கான் பகிர்ந்த இன்ஸ்டகிராம் வீடியோவில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் சனாவை வரவேற்கும் விதமாக பலூன்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வெள்ளை - நீல பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் தனது குழந்தையுடன் சனா கான் உள்ளார். அதைப் பார்க்கும் ரசிகர்கள் சனா கானுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். முன்னதாக கடந்த வாரம் தன் குழந்தைக்கு குர் ஆனை அறிமுகப்படுத்திய சனா கான், அல்லா தங்களை சிறந்தவனாக மாற்றுவானாக எனக் கூறி இருந்தார்.