மீண்டும் படம் இயக்கப்போகும் சமுத்திரக்கனி.. நீண்ட நாளாக காத்திருக்கும் கதை!
போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் ஆகிய படங்களை இயக்கிய அவர் இப்போது நடிக்க மட்டுமே செய்கிறார். ரஜினி, கமல், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் சமுத்திரக்கனி நேர்காணல் ஒன்றில் நீண்ட நாட்களாக தான் எடுக்காமல் வைத்திருக்கும் ஒரு கதையைப் பற்றி பேசிய செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சுந்தர்.கே.விஜயன், கே.பாலசந்தர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் சமுத்திரக்கனி. சில சீரியல்களையும் இயக்கியுள்ள அவர், சசிகுமார் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் எண்ட்ரீ கொடுத்தார். முன்னதாக எஸ்பிபி சரணை வைத்து உன்னை சரணடைந்தேன் படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். பின்னர் விஜயகாந்தை வைத்து நெறஞ்ச மனசு என்ற படம் எடுத்தார். இதன்பின்னர் நாடோடிகள் படம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.
இதனையடுத்து போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் ஆகிய படங்களை இயக்கியவர் இப்போது நடிக்க மட்டுமே செய்து வருகிறார். ரஜினி, கமல், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள சமுத்திரகனி தற்போது துல்கர் சல்மானுடன் இணைந்து காந்தா படத்தில் நடித்துள்ளார். இப்படம் நவம்பர் 14ம் தேதி தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மீண்டும் படம் இயக்கும் சமுத்திரக்கனி
இதனிடையே இப்படத்தின் ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில் பேசிய சமுத்திரக்கனி, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கடைசி கட்ட நிகழ்வுகள் குறித்து நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அதில், “கடைசியாக இயக்குநர் கே.பாலசந்தர் திடீரென அழைத்து என்னிடம் ஒரு கதை கொடுத்தார். அதன் பெயர் கடவுள் காண்போம் வா என்பதாகும். முதலில் வைத்த டைட்டில் தி எண்ட். பின்னர் அது மாற்றம் செய்யப்பட்டது. அவர் கைப்பட எழுதிய இரண்டு ஃபைல்களை கொடுத்து இதைப் படி என கூறினார்.
நான் அவரின் வீட்டிலிருந்து என்னுடைய அலுவலகம் செல்வதற்குள் படித்து முடித்து விட்டேன். எனக்கு பொதுவாக படிப்பது ரொம்ப பிடிக்கும் என்பதால் விறுவிறுவென படித்தேன். பின்னர் காரை எடுத்துக் கொண்டு அவர் வீட்டுக்கு சென்று சந்தித்தேன். கதை ரொம்ப நல்லாருக்கு என சொல்ல, படமாக எடுத்துருவோம் என என்னிடம் சொன்னார். ஒருவேளை நான் எடுக்கவில்லை என்றால், நீ எடுத்துடு என தெரிவித்தார்.
நான் வாங்க நாம எடுப்போம் என சொல்லித்தான் தொடங்கினோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அந்த கதை என்னிடம் இருக்கிறது. கண்டிப்பாக எடுப்போம். கடைசி நொடி வரை கே.பாலசந்தர் உழைத்துக் கொண்டே இருந்தார். தொடை பகுதியில் ஏதோ சிறிய கட்டி மாதிரி இருந்தது. அதனால் 2 நாட்கள் எழ முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சென்ற என்னிடம், நான் வேலை பார்க்கவில்லை. என்னால எதுவும் முடியாதோ என நினைக்க வைத்து விட்டது என சொன்னார். உடனடியாக 3, 4 மணி நேரம் வேலை பார்த்தால் நார்மல் ஆகி விடுவேன் என கூறி வேலை செய்தார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதனால் படம் இயக்கும் முடிவை கைவிட்ட சமுத்திரகனி மீண்டும் இயக்கத்திற்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.





















