Sameera Reddy | ”டியர் ஸ்ட்ரெச் மார்க்ஸ்” : வாரணம் ஆயிரம் மேக்னாவின் கலக்கல் கடிதம்..!
ஸ்ட்ரெச் மார்க்குகளுக்கு மடல் வரைந்திருக்கிறார் வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி.
ஸ்ட்ரெச் மார்க் எனப்படும் சரும சுருக்கங்களுக்கு மடல் வரைந்திருக்கிறார் வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி. தமிழில் சமீரா ரெட்டி நிறைய படங்கள் நடித்திருந்தாலும் கூட மாதவனுடன் ஜோடி போட்டு அவர் நடித்த வேட்டை திரைப்படம் தனிக்கவனம் பெற்றது.
தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து பிரபலமான சமீரா ரெட்டி. அதன்பின்னர் அஜித்குமாருடன் அசல், விஷாலுடன் வெடி, ஆர்யாவின் வேட்டை ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து இருக்கிறார். 2014-ல் தொழில் அதிபர் அக்ஷய் வர்டேவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு சமீரா ரெட்டி படங்களில் நடிக்கவில்லை. இவரும் இவரது மாமியாரும் இணைந்து வீட்டில் நடக்கும் சமையல் பற்றி வெளியிடும் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை. அதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவ்வப்போது சில சுவாரஸ்யமான புகைப்படங்களையும் தகவல்களையும் அவர் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி உள்ளது.
டியர் ஸ்ட்ரெச் மார்க்ஸ் என்று தனது பதிவுக்குத் தலைப்பிட்டுள்ளார் சமீரா ரெட்டி. அந்தப் பதிவில் அவர், "டியர் ஸ்ட்ரெச் மார்க்ச், நான் உன்னைப் பார்த்து பயந்திருக்கிறேன். உனை வெறுத்திருக்கிறேன். நீ எனக்கு வந்து சேர்ந்த நாள் எனக்கு அச்சத்தைத் தந்தது. ஆனால், நான் உனைத் தழுவிக் கொண்ட நாளில் நான் உனை எனது கவசம்போல் உடுத்திக்கொள்கிறேன். உனை நான் நேசிக்கிறேன். நான் புலியின் கோடுகளைப் போல் உனைப் பெருமித அடையாளமாகக் கொள்கிறேன். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நான் சக்தி பெற்றவளாய் உணர்கிறேன். 2021ஐ நான் எனது ஆரோக்கியத்துக்காக அர்ப்பணித்துள்ளேன். இந்த முயற்சியில் கிடைக்கவுள்ள ஸ்ட்ரெச் மார்க்குகளை நான் கொண்டாடப் போகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
திருமணம் பற்றிய அவரின் பதிவு:
"பெண்களிடம் பலரும் திருமணம் பற்றியே கேட்கிறார்கள். எனக்கு 35 வயதிலும் திருமணம் நடக்காமல் இருந்ததை பார்த்து எப்போது திருமணம் செய்து கொள்வாய், குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள போகிறாய்? என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் எனக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளவும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் பெண்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். திருமணமான பிறகும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து அழுத்தம் கொடுக்கின்றனர். குழந்தை பிறந்தால் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வீர்களா? என்று கேட்பார்கள். இதற்கெல்லாம் பதில் அளிக்க வேண்டியுள்ளது. திருமணம் பற்றி அவசரமாகவோ பயந்தோ எந்த முடிவும் எடுத்துவிடக்கூடாது" என்று திருமணம் பற்றி அவர் வெளியிட்டிருந்த கருத்தும் கவனம் பெற்றது.