HBD Samantha : நோயும், தோல்விகளும் புரட்டினால் என்ன? நீங்க சிங்கம்தான்.. ஹேப்பி பர்த்டே சமந்தா..
Happy Birthday Samantha Ruth Prabhu : ஒரு நடிகையாக சமந்தா எதிர்கொண்ட சவால்கள் நிறையவே இருக்கிறது. இருந்தும் அதில் இருந்து தன்னை மீட்டு மீண்டும் கெத்தான கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறார்
சமந்தா
கல்லூரி முடித்து மாடலிங் செய்துகொண்டிருந்த சமந்தாவை ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் தான் ஒரு நடிகையாக அடையாளம் கண்டுகொண்டார். அழகும் , புத்திசாலித்தனமும் கொண்ட ஒரு பெண் சமந்தா நடிகை ரேவதியைப் போன்றவர் என்று ரவிவர்மா சமந்தாவைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை நிரூபித்தும் காட்டினார் சமந்தா. எப்படி தெரியுமா?
மாஸ்கோவின் காவேரி படத்தில் நடிகை சமந்தா அறிமுகமாக இருந்தார். ஆனால் அந்த படம் வெளியாக தாமதமான காரணத்தினால் கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு பிரதியில் நாயகியாக அறிமுகமானார்.
தமிழில் ஜெஸ்ஸியாக த்ரிஷா எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாரோ அதே அளவு தனித்துவமாக நடித்து முதல் படத்தில் பாராட்டுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தமிழில் சமந்தா நடித்த பானா காத்தாடி , மாஸ்கோவின் காவேரி ஆகிய முதல் இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்தன. ஆனால் சமந்தாவின் நடிப்பும் அவரது அழகும் ரசிகர்களை கவரவே செய்தது.
சமந்தாவின் முதல் வெற்றி
நடிகையாக தமிழில் சமந்தாவுக்கு முதல் வெற்றியைக் கொடுத்த படம் ராஜமெளலி இயக்கிய நான் ஈ. ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதே ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன் வசந்தம் படத்திலும் நடித்தார். வசூல் ரீதியாக படம் சொதப்பினாலும் பள்ளி ,கல்லூரி , கல்லூரிக்கு பிறகு என வெவ்வேறு பரிமாணங்களில் சமந்தாவின் நடிப்பு எல்லாரையும் ஆகர்ஷித்தது.
இந்த கட்டத்தில் தான் ரவிவர்மண் சொன்ன வார்த்தையை நிஜமாக்கினார் சமந்தா. ஒரே ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை ரேவதிக்கு பிறகு தட்டிச்சென்ற ஒரே நடிகை சமந்தாதான்.
முன்னணி நடிகர்களுடன் கூட்டணி
விஜயுடன் கத்தி ,தெறி , மெர்சல் , சூர்யாவுடன் அஞ்சான் , 24 , தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்த சன் ஆஃப் சத்யமூர்த்தி என இரு துறைகளின் முன்னணி நடிகர்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்த சமந்தா த்ரிஷா , நயன்தாரா ஆகிய நடிகர்களின் வரிசையில் வந்து சேர்ந்தார்.
சமந்தா எதிர்கொண்ட சவால்கள்
இப்படி வெற்றிப்படி கட்டுகளில் ஏறிக்கொண்டு சென்ற சமந்தாவின் வாழ்க்கையில் அடுத்தடுத்த சவால்கள் வந்து மோதின. காதலித்து கோலாகலமாக செய்துகொண்ட திருமணத்தில் இருந்து விவாகரத்து பெற்றார். இப்போ தும்முனா தான் சரியாக இருக்கும் என்பதுபோல் வதந்திகளையும் அவதூறுகளை அவர்மேல் தூவியது ஒரு குறிப்பிட்ட நெட்டிசன் சமூகம்.
எல்லா கலாச்சார காவலர்களுக்கும் பதில் சொல்லும்படி புஷ்பாவில் ஊ சொல்றியா என்று திரும்பி வந்து ஒரு ரவுண்டு கட்டினார் சமந்தா. ஒரு பெரிய அதிர்ச்சியில் இருந்து அவர் மீள எத்தனை வருடம் ஆகுமோ என்று எல்லாரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் இப்படியான ஒரு பாடலில் கம்பேக் கொடுத்து அசத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
எல்லா விமர்சனங்களையும் கடந்து சிங்கம்போல் வலம் வந்த சமந்தாவுக்கு அடுத்த அதிர்ச்சி. அவருக்கு மையோசிடிஸ் என்கிற தசை அழற்ச்சி பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. சினிமாவில் இருந்து சிறிது காலத்திற்கு விலகி தொடர் சிகிச்சையில் அவரது ஒரே ஆறுதல் ரசிகர்களுடன் தனது அன்றாடங்களை பகிர்ந்துகொள்வதுதான்.
தொடர் தோல்விகள்
இடைப்பட்ட காலத்தில் சமந்தா நடித்த சாகுந்தலம் , குஷி உள்ளிட்ட படங்களும் கம்பேக் கொடுக்க தேவையான வெற்றிகளை தரவில்லை. தொடர்ச்சியாக சவால்களை எதிர்கொண்ட அவர் சினிமாவில் இருந்து ஒரு ஆண்டு காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளப் போவதாக தெரிவித்தார். ஆன்மீகச் சுற்றுலா , தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்வது என மனதிற்கு பிடித்ததை செய்து கடந்த ஓராண்டு காலமாக இருந்து வருகிறார் சமந்தா.
கம்பேக் நேரம்
2024-ஆம் ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடி முடித்த கையோடு மீண்டும் திரைக்கு திரும்ப ரெடியாகிவிடுவார் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் சிட்டெடல் ( citadel) தொடர் சமந்தாவுக்கு தேவையான அந்த கம்பேக் ஆக அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சமந்தா.