‛ராக்கெட்ரி – நம்பி விளைவு’ மாதவன் படம் எப்படி இருக்கு? ABP நாடு தரும் 1 நிமிட விமர்சனம் !
முதல் படத்திலேயே, சென்சிடிவ்வான ஒரு கதையை எடுத்து, யாரும் பெரிய குறை சொல்ல முடியாத அளவுக்கு எடுத்த இயக்குநர் மாதவன், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.
சாக்லேட் பாய் மாதவனா, இப்படி என ஆச்சர்யத்துடன் விரிய ஆரம்பிக்கும் கண்கள் படத்தின் கடைசி வரை அப்படியே இருக்கும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்திருக்கிறது இந்தப்படம். வாழ்க்கை வரலாறுகளைப் படமாக்குவது பெரும் தலைவலி. ஆனால், அனைத்தையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து, பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை அப்படியே செதுக்கி இருக்கிறார் நடிகரிலிருந்து இயக்குநராக பிரமோஷன் வாங்கி இருக்கும் மாதவன்.
இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகளில் அசகாய சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் நம்பி நாராயணன். ஆனால், திடீரென குற்றச்சாட்டின் ஒன்றின் காரணமாக கைது செய்யப்பட்டு, கிட்டத்தட்ட அவரது வாழ்க்கையே அழிந்துவிடுகிறது. இளமையில் தொலைக்க வைக்கப்பட்ட கெளரவம், புகழ், அந்தஸ்து என அனைத்தும் பல ஆண்டு சட்டப்போராட்டத்திற்குப் பிறகு, வயதான பிறகு அவருக்கு கிடைத்தது. விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்வில் நடந்த இந்த வரலாற்றை தான் தற்போது திரைப்படம் ஆக்கியிருக்கிறார் மாதவன்.
நம்பி நாராயணனை அப்படியே நடிப்பின் மூலம் திரைக்குக் கொண்டு வருவதில் மாதவனுக்கு 90 சதவீதம் மார்க் கொடுக்கலாம். இளம் வயது, நடுத்தர வயது, மூத்த வயது என அனைத்திலும் கன கச்சிதம். அதுமட்டுமல்ல, உணர்வுகளை வெளிக்கொண்டு வருவதில், அசத்தல் நடிப்பு.
ஆனால், மாதவன் நடிப்பை தூக்கி சாப்பிட்டு விடுகிறார் சிம்ரன், விஞ்ஞானியின் மனைவியாக, தம் கணவனுக்குப் போராடுவது, அவரை தேற்றுவது, விமர்சனங்களை எதிர்கொள்வது என விருதுக்கு தயாராகிவிட்டார் சிம்ரன். பலே சிம்ரன் என படம் பார்க்கும்போதே நம்மை சொல்ல வைக்கும்.. அந்தளவுக்கு கலக்கியிருக்கிறார் சிம்ரன்.
முழு படத்தில் வருவதை விட, சில நிமிடங்கள் வந்தாலே சபாஷ் சொல்ல வைக்கும் சூர்யா, இந்தப் படத்திலும் சில நிமிடங்களே வந்து, நாட்டோடு மனசாட்சியாகப் பேசி, ரசிகர்கள் மனதில் நிலைத்து இருப்பார் என்பதை தியேட்டரில் வரும் கைதட்டல்களே சாட்சி.
இவர்கள் மூவர் மட்டுமல்ல, இப்படத்தில் வரும் ஒவ்வொருவரும் தங்களது பணியை சிறப்பாகச் செய்து, மனதில் நிறைகிறார்கள்.
சாமின் இசையும், ஷிர்ஷா ரேவின் ஒளிப்பதிவும் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. முதல் காட்சியிலேயே, அசத்தப்போகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் ஷிர்ஷா.
நடிப்பில் எப்போதும் ஃப்ர்ஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கும் மாதவன், இப் படத்திலும் அதை செய்கிறார். ஆனால், டைரக்சனில் நிறைய கற்க வேண்டி இருக்கிறது என்று மட்டும் சொல்லலாம். ஏனெனில், திரைப்படத்தின் முதல் பாதி இழுக்கிறது. விறுவிறுப்பு குறைகிறது. காரணம், நிறைய தொழில்நுட்ப விஷயங்களைப் பேசுகிறார்கள். ஆனால், இரண்டாவது பாதியில், நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குநர் மாதவன். ஆனால், முதல் படத்திலேயே, சென்சிடிவ்வான ஒரு கதையை எடுத்து, யாரும் பெரிய குறை சொல்ல முடியாத அளவுக்கு எடுத்த இயக்குநர் மாதவன், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்.
6 மொழிகளில் வெளியாகி இருக்கும் ராக்கெட்ரி – நம்பி விளைவு, நிச்சயம் பாராட்ட வேண்டிய, வரவேற்க வேண்டிய திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், படத்தின் உண்மையான விளைவு, கலெக்ஷனில் எதிரொலிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.