Titanic: “ஒரே ஒரு காட்சிக்கு இன்றுவரை சம்பளம்” - யார் இந்த டைட்டானிக் ரீஸ் தாம்சன்?
டைட்டானிக் படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்த ரீஸ் தாம்சன் இன்றுவரை ராயல்டி தொகையை பெற்று வருகிறார்,
டைட்டானிக் படத்தை இயக்கியவர் ஜேம்ஸ் கேமரூன்,டிகாப்ரியோ,கேட் வின்ஸ்லெட் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். படத்தின் முடிவில் கப்பல் மூழ்கிவிடும். ஜாக் இறந்துவிடுவார், ரோஸ் பிழைத்துக் கொள்வார். படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அண்மையில் காதலர் தினத்தன்று டைட்டானிக் திரைப்படம் சென்னையில் உள்ள பல திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. இந்த தகவல் எல்லாம் நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். நமக்குத் தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிந்தும் அந்த படத்தில், தான் பேசிய ஒரே ஒரு வசனத்திற்காக இன்றுவரை ராயல்ட்டி பெற்றுக்கொண்டிருக்கும் ரீஸ் தாம்சனைப் பற்றியதுதான். யார் இந்த ரீஸ் தாம்சன்?
டைட்டானிக் திரைப்படத்தில் கப்பல் ஒரு பெரிய பனி முகட்டில் மோதி கப்பல் சேதமாகி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கடல் நீர் கப்பிற்குள் நிரம்பத் தொடங்குகிறது. கப்பலில் இருக்கும் முதல் வகுப்புப் பயணிகளை முதலில் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அவர்கள் எல்லாரும் பாதுகாப்பாக படகுகளில் ஏற்றப்படுகிறார்கள்.அந்த சூழலில் தானும் தனது அம்மாவும் தங்கியிருந்த அறையில் கடல் நீர் உள்ளே வருவதைப் பார்க்கும் அந்தச் சிறுவன் தனது அம்மாவிடம் கேட்கிறான் ”நம்ம எங்க போறோம் அம்மா?” அதற்கு அந்த அம்மாவின் பதில் இன்று வரை பலரின் மனதில் நிலைத்து நிற்கிறது. அந்த அம்மா சொல்கிறார் “முதல் வகுப்பு பயணிகளை எல்லாம் பாதுகாப்பாக அனுப்பிய பிறகு நமது முறைக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று. இந்தக் காட்சியில் அந்த ஒரு வசனத்தைப் பேசியவர்தான் ரீஸ் தாம்சன். இன்று உலகத்தின் எந்த மூலையில் டைட்டானிக் படம் ரிலீஸ் ஆனாலும் அதற்குண்டான ராயல்டி தொகையை ரீஸ் தாம்சனுக்கு அனுப்பி வைத்து வருகிறார்கள் அந்த படக்குழுவினர்.
ரீஸ் தாம்சன் தற்போது டிஜிட்டல் மார்கெட்டிங்கில் தலைமைப் பொறுப்பில் இருந்து வருகிறார். அவருக்கு இப்பொது 30 வயதை கடந்துவிட்டது. கடந்த சில ஆண்டுகள் வரை தனது ராயல்டி தொகையை தனக்கு படத்தின் நிர்வாகம் அனுப்பி வைத்ததாகவும் அண்மையில் தான் வேறு விலாசத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணத்தால் தனது ராயல்ட்டி தொகை வரவில்லை எனவும் ஆனால் இன்னும் தனது பழைய விலாசத்திற்கு அந்த பணம் நிச்சயம் அனுப்பப்பட்டிருக்கும் என உறுதியாக கூறுகிறார் ரீஸ் தாம்சன்.
இன்றும் ரீஸ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும், தான் நடித்த அந்த காட்சியை அடிக்கடி நினைவு கூறுவதாக தெரிவித்தார் அவர். மேலும் அவரது பணியிடத்திலும் அவரது அந்த கதாபாத்திரத்திற்காக அவர் பலரால் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறாராம்.
1997-ஆம் ஆண்டு டைட்டானிக் படம் திரைக்கு வந்தது. இன்றுவரை இந்த படத்தின் பல சாதனைகள் முறியடிக்கப்படாமலேதான் இருக்கின்றன.