Parasakthi: “விஜயுடன் மோதாதே”.. பராசக்திக்கு பால் ஊற்றிய ரசிகர்கள்.. உண்மையான பிரச்னை இதுதானா?
பராசக்தி படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் ஜனவரி 10ம் தேதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டது. ஆனால் எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் எதிர்மறை விமர்சனங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் படத்தின் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு படக்குழு சார்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.
பராசக்தி படம்
டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் “பராசக்தி” படம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இப்படத்தை சூர்யாவை வைத்து “புறநானூறு” என்ற பெயரில் சுதா கொங்கரா எடுக்க முடிவு செய்து அறிவிப்பு வெளியாகி பின்னர் அது கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் உள்ளே வர அப்படம் பராசக்தியாக மாறியது. தொடர்ந்து ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா, சேத்தன்,பைசல் ஜோசப், ராணா டகுபதி, காளி வெங்கட், பிரித்வி பாண்டியராஜன் என பலரும் இணைந்தனர். இப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். அதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் 100வது படமாகமவும் அமைந்தது.
நெகட்டிவ் விமர்சனங்கள்
இந்த படம் 1965ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ட்ரெய்லர் வெளியான சமயத்தில் மத்திய அரசை விமர்சித்து வைக்கப்பட்ட விமர்சனங்கள் சென்சார் சான்றிதழ் கிடைக்குமா என்ற கேள்வியை எழுப்பியது. ஏற்கனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அப்போதைய முதல்வர் அண்ணா தலைமையிலான திமுகவினரும் மேற்கொண்டனர் என்பதால் இப்படம் கட்சி சார்ந்த படமாக சமூக வலைத்தளங்களில் மடைமாற்றம் செய்யப்பட்டது.
ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் ஜனவரி 10ம் தேதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டது. 9ம் தேதி மதியம் தான் யு/ஏ சென்சார் சான்றிதழ் கிடைத்தது. தொடர்ந்து முதல் நாளே அப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. பலரும் சமூக வலைத்தளங்களில் அப்படத்தை கழுவி ஊற்ற தொடங்கினர். மறுபக்கம் பராசக்தி துணிச்சலான முயற்சி என்ற பாராட்டையும் பெற்றது. இதனிடையே இலவச டிக்கெட், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற சம்பவங்கள் பராசக்தியை மேலும் சேதப்படுத்தியது.
என்னதான் பிரச்னை?
இந்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பின்னால் விஜய் ரசிகர்கள் இருப்பதாக பராசக்தி படக்குழு பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக குற்றம் சாட்டி வருகிறது. அதேசமயம் விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகனுக்கு எதிராக வேண்டுமென்றே பராசக்தியை மோதவிட்டு வேடிக்கை பார்க்க நினைத்தார்கள். ஆனால் ஜனநாயகன் சென்சார் போர்டு பிரச்னையால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் விஜய் ரசிகர்களின் மொத்த கோபமும் பராசக்தி மீது திரும்பி விட்டதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றது.
மேலும், ரஜினி, கமல் ரசிகர்கள் எல்லாரும் பக்குவப்பட்டவர்களாக மாறியுள்ளனர். அவர்களின் வயதும் அதற்கு ஒரு காரணம் என சொல்லலாம். ஆனால் விஜய், அஜித், தனுஷ், சிம்பு தரப்பு ரசிகர்கள் எல்லாரும் இளம் வயதினர் என்பதால் ஒரு பிரச்னை என்றால் என்னவென்று யோசிக்காமல் எதிரில் இருப்பவர் யார் என்பதையெல்லாம் கருதாமல் கண்ணை மூடிக்கொண்டு சண்டைக்கு செல்கின்றனர். இது சமூக வலைத்தளங்கள் காலக்கட்டத்தில் இன்னும் பெரிதாக புகைந்து கொண்டிருக்கிறது.
விஜய் ரசிகர்கள் தரப்பின் கருத்து
அதேசமயம், விஜய்யின் கடைசிப் படமான ஜனநாயகன் முதலில் 2025 தீபாவளிக்கு வரலாம் என கூறப்பட்டது. ஆனால் அரசியல் களம் கண்ட விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்பதாலும், நீண்ட விடுமுறை என்பதாலும் அப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என கடந்தாண்டு மார்ச் மாதம் முதலில் ஜனநாயகன் படக்குழு தான் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணி நேரங்களில் பராசக்தி பொங்கலுக்கு வெளியாகும் என அதன் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் ட்வீட் செய்தார்.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது பிற நடிகர்கள் முடிந்தவரை ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பார்கள். அல்லது சில நாட்கள் இடைவெளியில் ரிலீஸ் செய்வார்கள். அப்படித்தான் ஜனநாயகன் ஜனவரி 9 ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும், பராசக்தி ஜனவரி 14ம் தேதிக்கு என முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் ஜனநாயகனுக்கு நெருக்கடி கொடுக்கப்படும், படம் ரிலீசாகாது என தெரிந்து தான் ரிலீஸ் தேதியை மாற்றியிருக்கிறார்கள்” என விஜய் ரசிகர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எனினும் பராசக்தி படத்தை ஓட விடக்கூடாது என்பது எங்கள் நோக்கமல்ல. ஒரு படம் நன்றாக இருந்தால் வந்து பார்ப்பார்கள். விஜய் படம் பற்றி தான் நெகட்டிவ் விமர்சனங்கள் வரும். படம் நன்றாக இருந்தால் அவை எல்லாம் காணாமல் போய் விடும். கோபத்தில் சில நெகட்டிவ் விமர்சனங்கள் எங்கள் தரப்பில் இருந்து வந்திருக்கலாம். ஆனால் சினிமாவை கொண்டாட வேண்டும் என்பதே நாங்களும் நினைக்கிறோம் எனவும் விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.





















