Shankar: அடுத்தடுத்து தோல்வி! காத்து வாங்கும் கேம் சேஞ்சர்! ஷங்கர் சறுக்குவது எங்கே?
ஐ, இந்தியன் 2, கேம் சேஞ்சர் என ஷங்கர் அடுத்தடுத்து தோல்வி படங்களை தந்து சறுக்கலைச் சந்தித்து வருகிறார்.
இந்திய திரையுலகின் பிரபல இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஷங்கர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என அடுத்தடுத்து பிரம்மாண்ட வெற்றிகளைத் தந்தவர். அவரது இந்தியன், முதல்வன் படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது.
சறுக்கும் ஷங்கர்:
2005ம் ஆண்டு அந்நியன், 2007ம் ஆண்டு சிவாஜி, 2010ம் ஆண்டு எந்திரன் என அவர் இயக்கிய படங்கள் இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அவரை அடையாளம் காட்டியது. ஷங்கரின் நண்பன் படம் வரை அவரது வெற்றி எந்தவொரு தடங்கலும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.
ஆனால், பிரம்மாண்ட பட்ஜெட்டில் நடிகர் விக்ரமின் கடினமான உழைப்பால் உருவான படத்தை பிரம்மாண்டமாக தயாரித்தும் அந்த படம் தோல்விப்படமாக அமைந்தது. அங்கு தொடங்கிய ஷங்கரின் தோல்வி 2.0, இந்தியன் 2, கேம் சேஞ்சர் என தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்து தோல்வி:
அதுவும் அவர் பிரம்மாண்ட வெற்றியாக தந்த பாகங்களின் அடுத்தடுத்த பாகங்களே அவருக்குத் தோல்விப்படமாக அமைந்தது. எந்திரன் 2 ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரவில்லை என்றாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால், ரசிகர்களை கவரத்தவறவிட்டது. 1996ம் ஆண்டு ரிலீசாகி கமலின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத படமாக உள்ள இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 படம் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஷங்கர் ஏன் இப்படி ஒரு விபரீத முயற்சியில் ஈடுபடுகிறார்? என்ற கேள்வியே எழுந்தது.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனராக இந்தியாவில் உலா வரும் ராஜமெளலிக்கே முன்னோடியாக திகழும் ஷங்கர், முதன்முதலாக தெலுங்கில் நேரடியாக களமிறங்கிய கேம் சேஞ்சர் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
ஏன் இந்த தடுமாற்றம்?
பிரம்மாண்ட பட்ஜெட், அதே வேகம், சமூக கருத்து என தனது வழக்கமான பாணியில் ஷங்கர் இறங்கியும் தோல்வி அடைய முக்கிய காரணமாக அமைந்திருப்பது வலுவான திரைக்கதையும், திரும்பி பார்க்க வைக்கும் வசனமும் இல்லாமல் போனதே ஆகும். ஷங்கரின் தொடர் வெற்றிப் பயணத்தில் அவருக்கு முக்கிய பங்களிப்பாக இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா.
அவரது இந்தியன் படம் முதல் எந்திரன் படம் வரை அவருக்கு வசனகர்த்தாவாகா சுஜாதா பணியாற்றினார். வசனகர்த்தவாக மட்டுமின்றி திரைக்கதை வலுவாக அமையும் ஷங்கருக்கு பக்கபலமாக சுஜாதா இருந்தார். அவரது முதல் படமான ஜென்டில்மேன் மற்றும் காதலன் படத்திலும் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் வசனகர்த்தவாக பணியாற்றினார்.
நிறைந்த அனுபவம் கொண்ட இவர்கள் தங்கள் வசனங்களாலும், தங்களது அனுபவத்தாலும் ஷங்கரின் திரைக்கதைக்கு வலுசேர்த்தனர். குறிப்பாக, ஷங்கருக்கு சுஜாதா மிகப்பெரிய பலமாக மாறினார். அந்நியன் படத்தில் சின்ன சின்ன தவறும் மிகப்பெரிய தவறுக்கு அடிவகுக்கும் என்ற அடிப்படை கருவை தனது சிறப்பான வசனங்களால் ரசிகர்களுக்கு கொண்டு சேர்த்திருப்பார் சுஜாதா.
நிரப்பப்படுமா வெற்றிடம்?
அவரது வெற்றிடம் எந்திரன் படத்திலே தெரிந்தது. ஏனென்றால் எந்திரன் படப்பிடிப்பின் பாதியிலே சுஜாதா காலமானார். இதனால், எந்திரன் படத்தில் ஷங்கர் வசனம் எழுதினார். அதன்பிறகு அவர் மதன் கார்க்கியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். ஆனால், மதன் கார்க்கியுடனான அவரது பயணத்தில் நண்பன் மட்டுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. நண்பன் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால் அதன் வெற்றியில் சிக்கல் ஏற்படவில்லை.
ஆனால், ஐ படத்திற்கு சுபா, 2.0க்கு ஷங்கருடன் ஜெயமோகன், மதன் கார்க்கி, இந்தியன் 2 படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணக்குமார் என அடுத்தடுத்த படங்களில் அவர் பலரை பயன்படுத்தியும் இதுவரை அவருக்கு பலன் கிட்டவில்லை.
ரசிகர்களின் ரசனை:
நண்பனுக்கு பிறகு அதாவது 2012ம் ஆண்டுக்கு பிறகு சுமார் 13 ஆண்டுகளாக ஷங்கருக்கு அவரது பழைய ப்ளாக்பஸ்டர் வெற்றி இதுவரை கிட்டவில்லை. கேம் சேஞ்சர் படத்தில் 3 பாடல்களுக்கு மட்டும் 75 கோடி ரூபாய் அளவிற்கு செலவு செய்த ஷங்கரால் வலுவான திரைக்கதையை எழுத இயலவில்லை என்றும், அதற்கு சரியான வசனகர்த்தாவுடன் அவர் பணியாற்றவில்லை என்பதுமே அவரது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
மேலும், வில்லன் குணாதிசயம் கொண்ட ஹீரோக்களை, சட்டவிரோதமாக செயல்படும் ஹீரோக்களை கொண்ட படங்களே ( கே.ஜி.எஃப், புஷ்பா, அனிமல்) தற்போது வெற்றி பெற்று வரும் நிலையில், ஷங்கரின் சமூக கருத்துள்ள படங்கள் வெற்றி பெற போராடி வருகின்றன.
ரசிகர்களின் ரசனை என்னதான் தலைமுறைக்கு தலைமுறை மாறினாலும், படத்தின் உருவாக்கத்தில் பிரம்மாண்டம் இருந்தாலும் படத்தின் திரைக்கதையில் வலிமை இல்லாவிட்டால் அதை ஏற்க மறுப்பதில் மட்டும் மாற்றம் இதுவரை உண்டாகவில்லை. ரசிகர்களின் மனநிலையை புரிந்து அவர்களை திரையரங்கில் கட்டிப்போடும் பழைய ஷங்கராக அவர் கம்பேக் தர சரியான திரைக்கதை மற்றும் சரியான வசனகர்த்தாவுடனும் கூட்டுசேர வேண்டியது அவசியம்.