Rajinikanth: ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.. அயோத்தி கிளம்பிய ரஜினிகாந்த் உற்சாகம்!
Ayodhya Ram Mandhir: ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி புறப்பட்டார்.
ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்பது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
#WATCH | Chennai, Tamil Nadu: Actors Rajinikanth and Dhanush leave for Ayodhya to attend the Pran Pratishtha ceremony tomorrow. pic.twitter.com/emB7QkP7gy
— ANI (@ANI) January 21, 2024
ராமர் கோயில் கும்பாபிஷேக விழா
அயோத்தி விவகாரத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, அயோத்தியில் மசூதி இருந்த நிலம், பகவான் ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமர் சிலை) சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
மேலும், இடிக்கப்பட்ட மசூதிக்கு மாற்றாக, இஸ்லாமியர்களுக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உத்தரபிரதேச அரசுக்கு 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நாளை (ஜன.22) நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 136 சனாதன பாரம்பரியங்களைச் சேர்ந்த 25,000 இந்து மதத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தி புறப்பட்ட ரஜினிகாந்த்
மேலும், சுமார் 10 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நாளை நிறுவ உள்ளார். அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள் வரை இந்த சிறப்பு அழைப்பு பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உத்தரப் பிரதேசம், அயோத்திக்கு ரஜினிகாந்த் இன்று புறப்பட்டுள்ளார். மேலும் ராமர் கோயில் நிகழ்வில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் ஆன்மீகப் பயணம்
முன்னதாக ஜெயிலர் பட வெளியீட்டின் போது இமயமலை புறப்பட்ட ரஜினிகாந்த், ஆன்மீகத் தலங்களுக்கு வரிசையாகப் பயணித்து, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். தன்னைவிட இளையவரான யோகி ஆதித்யாநாத்தின் கால்களில் ரஜினி விழுந்தது இணையத்திலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் கடும் எதிர்வினைகளைப் பெற்ற நிலையில், யோகிகள், சன்னியாசிகளை சந்தித்தால் அவர்களது கால்களில் விழுவது தன் வழக்கம் என்றும், நட்புரீதியாக மட்டுமே யோகி ஆதித்யநாத்தை தான் சந்தித்ததாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தன் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. கிரிக்கெட்டில் செய்யப்படும் மத அரசியலை தட்டிக் கேட்கும் இஸ்லாமியராக நடிகர் ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு