கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
3 ஆண்டுகள் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த ஷிம்ஜிதாவை போலீசார் வலைவீசி தேடும் நிலை உருவாகியுள்ளது. பேருந்தில் எடுத்த வீடியோவால் தீபக் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வீடியோ எடுத்த பெண் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் ஷிம்ஜிதா முஸ்தஃபா என்ற பெண் பேருந்தில் ஒருவர் தன்னை தவறான எண்ணத்தில் பாலியல் ரீதியாகத் தொட்டதாக வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. பின்னர், அதில் சம்பத்தப்பட்ட நபர் தீபக் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதையடுத்து இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தீபக்கின் தாயார், ஷிம்ஜிதா மீது புகாரளித்தார். அப்புகாரின்படி போலீஸார், பிஎன்எஸ் பிரிவு 108-ன் கீழ் தற்கொலைக்குத் தூண்டியதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசும் உறுதியளித்திருக்கிறது.
போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அந்தப் பெண் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஷிம்ஜிதாவுக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு 12-ம் வகுப்பு முடித்த கையோடு திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின்னர், மலப்புரம் மாவட்டத்தின் வெள்ளேரி கிராமத்துக்கு இடம்பெயர்ந்த ஷிம்ஜிதா, தனது கணவர் வீட்டாரின் ஆதரவோடு வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றார். கூடவே, BEd பட்டமும் பெற்றார்.
இவ்வாறிருக்க, 2020 உள்ளாட்சித் தேர்தலில் அரிக்கோடு கிராம பஞ்சாயத்தின் வெள்ளேரி வார்டில் பெண் வேட்பாளரை களமிறக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலைந்துகொண்டிருந்தபோது, அவ்வாய்ப்பு ஷிம்ஜிதாவைத் தேடி வந்தது. தேர்தலில் வெள்ளேரி வார்டில் அதற்கு முந்தைய தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் வெற்றிபெற்ற வாக்குகள் வித்தியாசத்தை விட அதிகமாக 538 வாக்குகள் வித்தியாசத்தில் ஷிம்ஜிதா வெற்றிபெற்றார். அவரின் அணுகுமுறையும் பலரை ஈர்த்து. பஞ்சாயத்து தலைவராகும் அளவுக்கு அவர் திறன் கொண்டிருந்ததாகவும் கட்சிக்குள் கூறப்பட்டது. அதற்கேற்றவாறே முதல் 3 ஆண்டுகள் பஞ்சாயத்து உறுப்பினராக தீவிரமாகச் செயல்பட்டார் ஷிம்ஜிதா.
இந்தச் சூழலில் ஷிம்ஜிதா, தனது கணவர் துபாயில் வேலையில் இருந்தாதல் அங்கு சென்றார். அதேசமயம், பஞ்சாயத்து உறுப்பினராக அவரின் இருப்பு இங்கு அவசியம் என்பதால், உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சிக்குள்ளிருந்து அழுத்தம் வந்தது. இதனால், ஷிம்ஜிதாவுக்கும் கட்சிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. பின்னர், அவரது கணவர் கேரளாவுக்கு வந்து, அதிகாரபூர்வமற்ற முறையில் பஞ்சாயத்து தொடர்பான பணிகளில் ஈடுபட்டார்.
அதேபோல் Vlog எடுப்பது, வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்தார். அதேவேளையில், அரசியலில் அவரின் ஈடுபாடு குறைந்தது. இதனாலேயே, சமீபத்தில் நடந்த கேரள உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அவரை மீண்டும் தீவிர அரசியலுக்கு கொண்டு வர முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. தற்போது, கடந்த 6 மாதங்களாக கோழிக்கோட்டில் வடகராவில் தனியாக வாசித்து வரும் ஷிம்ஜிதா, சோசியல் மீடியா இன்புளூயன்சாராக தனது கரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில்தான், பேருந்தில் ஒருவர் தவறான எண்ணத்தில் தன்னைப் பாலியல் ரீதியாகத் தீண்டியதாக அவர் வெளியிட்ட வீடியோவும், அதனால் சம்பத்தப்பட்ட நபர் தற்கொலை செய்துகொண்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.





















