Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Dmdk Premalatha: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் 90% கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட நிலையில், தேமுதிகவிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக - திமுக கூட்டணி நிலவரம் என்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுகவும் தங்களது அணியை பலப்படுத்த கூட்டணியின் பலத்தை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது வரை திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மமக, மநீம உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. மேலும் புதிதாக எஸ்டிபிஐ மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமகவும் கூட்டணியில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை
இதே போல அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, அமமுக, தமாக, புதிய நீதி கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. எனவே இந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை அதிமுக ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அடுத்தாக தேமுதிகவையும் தங்கள் பக்கம் இழுக்க அதிமுக மற்றும் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
ராஜ்யசபா சீட்- தேமுதிக அதிருப்தி
இதனையடுத்தும் அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடித்து வந்த நிலையில், ராஜ்யசபா சீட் ஒதுக்கீட்டில் பிரச்சனை ஏற்பட்டது. அந்த வகையில் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும் என வாய் மொழி உத்தரவு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட நிலையில், கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் தேமுதிக அதிருப்தி அடைந்த நிலையில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதேநேரம் தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலின் போது ஒரு சீட் தேமுதிகவிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என அதிமுக சார்பாக அறிக்கையாக வெளியிடப்பட்டது.
தேமுதிக கேட்கும் இரட்டை இலக்க தொகுதிகள்
இருந்த போதும் இதனை தேமுதிக ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தேமுதிக தலைமையிடம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் தேமுதிகவிற்கு 15 தொகுதிகளுக்கு குறையாமல் சீட் வழங்க வேண்டும் என நிர்பந்தம் விதித்துள்ளது. ஆனால் அதிமுக தரப்போ அதிகபட்சமாக 8 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.
திமுக தரப்பிலோ 6 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்குவதாக தங்களது "ஆஃபர்" கொடுத்துள்ளது. ஆனால் இதனை தேமுதிக ஏற்றுக்கொள்ளவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தாமல் அமைதி காத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் ஒரு மாத காலம் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிக என்ன முடிவு எடுக்கப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






















