Teachers Protest: ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றம்; ஓகே சொன்ன முதல்வர்- விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!
இடைநிலை ஆசிரியர்களுக்கு 2 இன்க்ரிமெண்ட் அல்லது அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகை என்ற வகையில் ஊதியத்தில் உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் போராடத் தொடங்கி ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஓகே சொன்னதாகக் கல்வித்துறை வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியாகும் என்று தகவல் கசிந்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2009ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ஆம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம்தான் கிடைக்கிறது.
திமுக வாக்குறுதி
இதை எதித்து அப்போதில் இருந்தே ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என்று வாக்குறுதி (எண். 311) அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஆசிரியர்களின் சம ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஆசிரியர்கள் 7ஆம் ஊதியக் குழுவில் பாதிக்கப்பட்ட 12 இன்க்ரிமெண்டில் 6 இன்க்ரிமெண்ட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எவ்வளவு ஊதிய உயர்வு?
இதில் 2 இன்க்ரிமெண்ட் அல்லது அதிகபட்சம் 2 ஆயிரம் ரூபாய் சிறப்புத் தொகை என்ற வகையில் ஊதியத்தில் உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய பள்ளிக் கல்வித்துறை சார் அறிவிப்புகள், மானியக் கோரிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.






















