Dunki in Oscars: மூன்றாவது முறையாக ஆஸ்கருக்கு போட்டிபோடும் ஷாருக்கான்.. சாதிக்குமா டங்கி?
ஷாருக்கான் நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான 'டங்கி' படத்தை ஆஸ்கர் விருதுகளுக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
டங்கி
ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளஷல், பொம்மன் இரானி, விக்ரம் கொச்சார், சதிஷ் ஷா உள்ளிட்டவர்கள் நடித்து ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள படம் டங்கி. ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
ப்ரித்தம் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி திரையரங்கில் டங்கி படம் வெளியானது. இங்கிலாந்து செல்ல வேண்டும் என்கிற கனவில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் போராட்டம், சொந்த மண்ணை விட்டு அகதிகளாக பல நாடுகளுக்கு செல்வதை மையமாக வைத்து காமெடி எனும் கதையை மையப்படுத்தி டங்கி படம் எடுக்கப்பட்டது. உலக அளவில் 450 கோடிகளுக்கு மேலாக வசூலித்துள்ள டங்கி படம் மெல்ல மெல்ல 500 கோடிகளை நெருங்கி வருகிறது.
ஆஸ்கருக்கு செல்கிறதா டங்கி ?
View this post on Instagram
தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி டங்கி திரைப்படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை ஷாருக் கான் நடித்த இரண்டு படங்கள் ஆஸ்கருக்கு போட்டி போட்டிருக்கின்றன. 2004ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்வதேஸ்’ மற்றும் 2005ஆம் ஆண்டு வெளியான ‘பஹேலி’ ஆகிய ஷாருக் கான் படங்கள் ஏற்கெனவே ஆஸ்கர் ரேஸில் போட்டியிட்டன. தற்போது மூன்றாவது முறையாக ஷாருக் கானின் படம் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட இருப்பதை நினைத்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்கருக்கு செல்லும் படங்கள்
2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளில் வெளியான படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படங்களில் சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு மார்ச் 11ஆம் தேதி விருதுகள் அறிவிக்கப்படும். முன்னதாக மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து வெளியான ‘2018’ படம் ஆஸ்கருக்கு தேர்வாகி இருந்தது. ஆனால் இறுதிப்பட்டியல் வரை அந்தப் படம் செல்லவில்லை என்பதால் ரசிகர்கள் சோகமடைந்தார்கள்.
இதனை அடுத்து இப்படியான நிலையில் 2018 படத்திற்கு தற்போது இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறந்த அயல்மொழி படப்பிரிவில் இருந்து வெளியேறிய இப்படம், உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட 265 படங்களில் ஒன்றாக சிறந்த படத்திற்கான பிரிவில் இன்னும் கடுமையாக போட்டி போட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்ட 12th ஃபெயில் படமும் இந்தப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
மேலும் படிக்க : Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!