"நான் கமல் கிடையாது; நடிப்புன்னா என்னன்னே தெரியாது“ - நடிகர் ராஜ்கிரண் ஓபன் அப்!
"சினிமா ஒரு வியாபாரம். தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு சிரமப்பட்டாலும் , கடனாளியாக இருந்தாலும் எனக்கு பிடிக்காத விஷயத்தை நான் செய்ய மாட்டேன்."
திரைத்துறையில் மண்வாசம் மணக்கும் கதைகளில் நடித்தவர் ராஜ்கிரண். பொதுவாக எந்த துறையை சார்ந்தவர்களும் தங்களுக்கென தனி பாணியை பின்பற்றுவார்கள். அப்படித்தான் ராஜ்கிரணும் தனக்கான தனி ஸ்டைலை வைத்திருந்தார். தனது சினிமா அனுபவம் குறித்து நேர்காணலில் ராஜ்கிரண் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார். அதனை கீழே தொகுத்துள்ளோம்
குறைவான படங்களில் ஹீரோவாக நடிக்க காரணம் என்ன ?
”சினிமா என்பது வெகுஜன ஊடகம். அது நிறைய மக்களை சென்றடையும் . அந்த நிலையில் இறைவன் என்னை வைத்திருக்கிறான். நான் சமூக சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்கக்கூடிய படங்களில் நடிக்க கூடாது. சிலர் சினிமா ஒரு கலை அதற்காக செய்கிறோம் என்பார்கள். அப்படியெல்லாம் கிடையாது. சினிமா ஒரு வியாபாரம். தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு சிரமப்பட்டாலும், கடனாளியாக இருந்தாலும் எனக்கு பிடிக்காத விஷயத்தை நான் செய்ய மாட்டேன். அதனாலதான் நான் ஹீரோவாக நடித்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் நான் நடித்த படங்கள் 21” என்றார் சிரித்தப்படி.
View this post on Instagram
வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாமே ! ஏன் நடிக்கவில்லை ?
”தவமாய் தவமிருந்து படம் ரிலீஸ் ஆன பிறகு என்னை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் வங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விட 10 மடங்கு அதிகமாக கொடுக்க கூட தயாராக இருந்தார்கள்.நான் அவர்களை திட்டிவிட்டேன். ராஜ்கிரண் என்றால் செண்டிமெண்ட் இருக்கும் , சண்டை இருக்கும். என்றுதான் மக்கள் எதிர்பார்த்து வருவார்கள். அப்படி இருக்கும் பொழுது என்னை வில்லனாக நடிக்க சொன்னால் அது எடுக்கும் படத்திற்கு மைனஸ்தான். ரசிகர்களும் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கமல் மாதிரி , அஜித் மாதிரி , சூர்யா மாதிரி நான் நடிகன் இல்லை. அவங்க எல்லோரும் நடிப்பை உயிர் மூச்சா நினைக்குறாங்க. நான் அப்படியானவன் கிடையாது. என்னுடைய கேரக்டர் இயல்பாக என்னவாக இருக்கிறதோ அப்படியான கேரக்டரில்தான் நான் நடிப்பேன். வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் ‘நடிக்கணும்’ நான் அதை செய்யமாட்டேன் “
இந்து , முஸ்லீம் என இரண்டு மதத்திலும் எப்படி பற்றோடு இருக்கீங்க ?
விவேகானந்தரையும் , திருமூலரையும் முழுமையாக புரிந்துக்கொண்டால் இந்து மதம் புரியும். யாரெல்லாம் அற வழியில் நடக்கிறார்களோ அவர்கள் எல்லாம் இந்து. இஸ்லாம் நேர்மையை சொல்லிக்கொடுக்கிறது. அதைத்தான் இந்து மதமும் கூறுகிறது. எனவே இரண்டும் ஒன்றுதான்.
courtesy : விகடன்