ஒரு மனுஷன்; 1500 பேருக்கு வாழ்வாதாரம்; ராதாரவியின் பார்வையில் ரஜினி - இளவரசு பகிர்ந்த நினைவலை!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நடிகர் ராதாரவி புகழ்ந்து பேசியதைப் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார் நடிகர் இளவரசு.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நடிகர் ராதாரவி புகழ்ந்து பேசியதைப் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார் நடிகர் இளவரசு. 1987ல் பாரதிராஜா இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார் இளவரசு. அன்று தொடங்கி இப்போது வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர வேடமாகட்டும், இம்சை அரசனில் வந்த மங்குனி அமைச்சராக இருக்கட்டும் தன்னை அதில் கச்சிதமாகப் பொருத்திக் கொண்டு அசத்திவிடுவார்.
அவர் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் பற்றி நடிகர் ராதாரவி கூறியதைப் பற்றி பேசியிருக்கிறார்.
அவர் கூறியதாவது, “லிங்கா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அணை கட்டும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். தூரத்தில் அணையின் மீது ரஜினி சார் நின்றிருந்தார். நான் ராதாரவி அண்ணன், விஜயகுமார் அண்ணன் எல்லாம் அப்படத்தில் நடித்திருந்தோம். அந்தக் குறிப்பிட்டக் காட்சி படமாக்கப்பட்ட போது ராதாரவி அண்ணன் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேன். ரஜினி சாரை அப்படியே பார்த்துக்கிட்டு இருந்த ராதாரவி அண்ணன், ஏன் இளவரசு, இங்க எத்தனை பேர் சூட்டிங்கில் இருக்காங்க என்றார். நான் அண்ணே.. ஜீனியர் ஆர்டிஸ்ட் ஆயிரம் பேர், நாம ஒரு ஐம்பது, அறுபது பேர், வெள்ளைக்காரங்க 50 பேர் அப்புறம் 5 யானை என்றேன். அந்த நிற்கிறாரே அந்த ஒரு ஆள். அவர் இல்லாட்டி இங்க இன்னிக்கு நம்ம யாருக்காவது வேலை இருக்குமா? சாப்பாடு, சம்பளம், போக்குவரத்து எல்லாம் அந்த ஒற்றை ஆள் காரணமாக 1500 பேருக்குக் கிடைக்குது. காலம் ஒருத்தருக்குக் கொடுக்கிற வாய்ப்பைப் பார்த்தியா என்றார். என்ன ஒரு ஜாதகம். நானும் நடிச்சிட்டுத்தான் இருக்கேன். ஆனால் அப்படியே போகுது. அவர் தான் சூப்பர்ஸ்டார் ஆயிருக்காரு. அது எல்லாருக்கும் கிடைக்குமா என்றார். பக்கத்தில் இருந்த விஜயகுமார் அண்ணனும் ஆமோதித்தார். நாங்கள் பேசி முடிக்க ரஜினி சார் சூட்டிங் முடித்து வந்தார். அவரைப் பார்த்தவுடன் ராதாரவி அண்ணன் நாங்கள் பேசிகிட்டிருந்தது அப்படியே அவரிடம் சொன்னார். ஆனால், அவரோ எவ்வித அலட்டலும், பெருமையும் இல்லாமல் பவ்யமாக எங்கள் எல்லோரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டுச் சென்றார்” என்று கூறினார்.
அந்தப் பேட்டி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
லிங்கா தோல்வி வேறு கதை.. லிங்கா படப்பிடிப்பில் நடந்ததைப் பற்றி நடிகர் இளவரசு இப்படி பெருமையாகப் பேசினாலும் கூட லிங்கா திரைப்படம் ரஜினியின் தோல்விப் படங்களில் ஒன்று. ரஜினியின் தயாரிப்பில் உருவான பாபா படத்தை தொடர்ந்து பல படங்கள் பிளாப்பை சந்தித்தன. அவ்வாறு தோல்வியை தழுவிய படம் தான் லிங்கா.
கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் அனுஷ்கா ரெட்டி, சோனாக்ஷி சின்கா, சந்தானம், ஜெகபதி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். லிங்காவை 100 கோடி பட்ஜெட்டில் ராக்லைன் என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது. இப்படம் மிக மோசமான தோல்வியை அடைந்ததால் விநியோஸ்தர்கள் படு மோசமான நஷ்டத்தை சந்தித்ததாக சர்ச்சைகள் எழுந்தன. ரஜினியிடம் நஷ்டத்தை ஈடுகட்ட பணம் கொடுக்குமாறு ரஜினியிடம் கோரிக்கை வைத்து பிரச்சனை செய்தனர் என்பதெல்லாம் வேறு கதை.