Jailer: ‘எனக்குன்னே வருவீங்களா?’ ... மாற்றப்படும் ‘ஜெயிலர்’ படத்தின் பெயர் .. ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி...
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் எழுந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் டைட்டிலுக்கு சிக்கல் எழுந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
எண்ட்ரீ கொடுக்க தயாரான ஜெயிலர்
அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன், ஜீவிதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஜெயிலர் படப்பிடிப்பு தொடங்கியதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தின் ஷூட்டிங்கை முடித்த ரஜினி தற்போது ஓய்வு எடுப்பதற்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.
அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள்
செப்டம்பர் மாதம் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றுள்ள தீம் மியூசிக் வெளியானது. தொடர்ந்து ரஜினியின் கேரக்டரான முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் தோற்றம் அவரது பிறந்தநாளன்று (டிசம்பர் 12) வெளியானது. இதனையடுத்து ஜூலை 6 ஆம் தேதி முதல் பாடலாக ‘காவாலா’ வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. பாடலாசிரியர், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார்.
இதற்கிடையில் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ‘ஹூக்கும்’ நாளை (ஜூலை 17) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோ ரஜினி பஞ்ச் டயலாக்குகளுடன் இடம் பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்தது. இன்னும் சில வாரங்களே ரிலீசுக்கு உள்ள நிலையில் ஜெயிலர் படத்தின் டைட்டில் பிரச்சினையில் சிக்கியுள்ளது.
என்ன நடந்தது?
அதாவது தமிழில் ஜெயிலர் என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது போல, மலையாள சினிமாவிலும் ஜெயிலர் என்னும் பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது. பீரியட் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தியான் ஸ்ரீனிவாசன் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் கதைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்றாலும், தலைப்பு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பதால் மலையாளத்தில் படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மலையாள ஜெயிலர் படக்குழு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகியதாகவும், ஆனால் கேரளாவில் இருந்தாலும் தமிழ் படத்தின் டைட்டிலை மாற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.