Thalaivar 171: ரஜினிகாந்த் படத்தில் இருந்து கழட்டிவிடப்பட்ட ஃபகத் பாசில் - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஃபகத் பாசில் வில்லனாக கொண்டு வந்தால் ரசிகர்களுக்கு சுவாரசியம் இருக்காது என எண்ணிய படக்குழு ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேறொரு நடிகரை தேர்வு செய்துள்ளனராம்.
Thalaivar 171: தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஃபகத் பாசிலுக்கு பதிலாக வேறொரு நடிகரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தலைவர் 170:
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் ரிலீசாகி பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரி குவித்தது. விமர்சனத்திலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒட்டுமொத்தமாக ரூ.500 கோடிக்கு மேல் கலெக்ஷனை அள்ளிய ஜெயிலர் படம் புதிய சாதனையை படைத்தது.
ஜெயிலர் படத்துக்கு பிறகு ஜெய்பீம் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதில், ரஜினியுடன் இணைந்து 32 ஆண்டுகளுக்கு பிறகு அமிதாப் பச்சன் நடிக்கிறார். இவர்களுடன் ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஷயன், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். முதன்முறையாக ஃபகத் பாசில் ரஜினியுடன் இணைந்து வில்லன் கேரக்டரில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பொழுதில் இருந்தே அதிகரித்துள்ளது.
கழட்டிவிடப்பட்ட பகத்:
திருவனந்தபுரத்தில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 படத்திலும் ரஜினி நடிக்க கமிட்டாகி உள்ளார். லியோ திரைப்படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக தலைவர் 171 படத்தின் பணிகளில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தின் முக்கிய அப்டேட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஃபகத் பாசில் நடிப்பார் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இந்த நிலையில் அதேபோல் இந்த படத்திலும் அவரை வில்லனாக கொண்டு வந்தால் ரசிகர்களுக்கு சுவாரசியம் இருக்காது என எண்ணிய படக்குழு ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேறொரு நடிகரை தேர்வு செய்துள்ளனராம். அதன்படி ரஜினிக்கு வில்லனாக பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ரஜினி தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, பிருத்விராஜ் சலார் படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.