11 Years Of Naan E : அதே காதல் கதை...அதே வில்லன்...கடைசியில் ஃபைட்...ஒரே வித்தியாசம் படத்தின் கதாநாயகன் ஒரு ஈ....11 ஆண்டுகளை நிறைவு செய்யும் நான் ஈ
ராஜமெளலி இயக்கி நானி சமந்தா சுதீப் ஆகியவர்கள் நடிப்பில் வெளியான நான் ஈ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் ராஜமெளலி இயக்கியத் திரைப்படம் நான் ஈ வெளியானது. இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது நான் ஈ திரைப்படம்.
எனக்கு ஃபேண்டஸி என்பது எதார்த்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு கருவி. நமக்கு வரும் கனவுகள், தோன்ரும் காட்சிகள் ஆகிய அனைத்தும் நிஜ வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான ஒரு கருவியாகவே கற்பனை நமக்குப் பயன்படுகிறது’
உலகின் மிக புகழ்பெற்ற ஃபேண்டஸி பட இயக்குநராக கருதப்படும் டிம் பர்டன் சொன்ன வரிகள் இவை. இந்த வாக்கியத்தை சற்று தெளிவாக புரிந்துகொள்ள இரண்டு சூழ்நிலைகளில் நம்மைப் பொருத்திப் பார்க்கலாம்
சீன் 1
ஒரு படம் பார்க்கிறோம். ஹீரோவும் ஹீரோயினும் காதலிக்கிறார்கள். வில்லனும் ஹீரோயினை காதலிக்கிறார். தனது ஆட்களை வைத்து ஹீரோவை கொலை செய்கிறார் வில்லன். ஹீரோ எப்படியோ மறுபிறவி எடுத்து வந்து ஹீரோயினிடம் உண்மையைச் சொல்கிறார். இருவரும் சேர்ந்து வில்லனை பழிவாங்குகிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து திட்டமிட்ட குடும்பம் திகட்டாத இன்பம் என்று வாழ்கிறார்கள். படம் முடித்து நீங்கள் வெளியே வரும்போது நம் முன் மைக்கை நீட்டும் யூடியூப் சானலிடம் என்ன சொல்வோம் தெரியுமா. மொக்கப் படம்
சீன் 2
அதே படம் அதே கதை அதே வில்லன். இந்த முறை ஹீரோ மறுபிறவி எடுப்பது மனித ரூபத்தில் இல்லை ஒரு ஈயாக பிறக்கிறார் ஹீரோ. கதா நாயகியும் ஈ யும் சேர்ந்து எப்படி வில்லனை பழிதீர்க்கிறார்கள் என்பது மிச்சக்கதை. இப்போது அதே மைக் முன் நாம் சொல்வது ’சூப்பர் படம்’ அது எப்படி?
பொய்யான கதைகள்
பொதுவாக தமிழில் அல்லது இந்திய சினிமாவில் ஃபாண்டஸி சினிமா என்றால் ஒருவிதமான ஒவ்வாமையே இருந்து வருகிறது. இதற்கு முதல் காரணம் மேற்கு நாடுகளைப் போல் நம்மிடம் தொழில்நுட்ப வசதிகள் இல்லாதது. மற்றொரு காரணம் ஃபேண்டஸி கதைகளை எடுக்கும் இயக்குநர்கள் கற்பனைதானே என்று எதார்த்ததுடன் சுத்தமாக தொடர்புபடுத்திக் கொள்ள முடியாத ஒன்றை படமாக்க முயல்வதால் நமக்கு ஏற்படும் சலிப்பு.
வெறும் கற்பனைகளா ஃபேண்டஸி திரைப்படங்கள்
ஒரு ஏலியன் பூமிக்கு வந்து மனிதனுக்கு நண்பனாகலாம், ஒரு புத்தகத்தை திறந்தால் அதற்குள் நாம் சென்று அந்தப் புத்தகத்தில் ஒரு கதாபாத்திரமாகி விடலாம். இப்படி ஒரு கதை சொல்லப்பட்டால் அதை நாம் குழந்தைகளுக்கான கதைகளாக ஒதுக்கிவிடுவோம் அல்லது இப்படியெல்லாம் நிஜத்தில் நடக்குமா என்கிற கேள்வியை கேட்போம். ஆனால் யாரை வைத்து ஒரு கதை சொல்லப்படுகிறது என்பதில் இல்லை யாருக்காக சொல்லப்படுகிறது என்பது தான் இத்தகையப் படங்களில் நாம் பார்க்க வேண்டியது.
நான் ஈ
படத்தின் கதாநாயகன் கதாநாயகியைக் காதலிக்கிறான். ஆனால் கதாநாயகியை அடைய நினைக்கு வில்லன் அவனைக் கொன்றுவிடுகிறான். நிஜத்தில் இந்த கதை நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இது ஒரு குற்றம். குற்றம் செய்தவனுக்கு தண்டனை பெற்றுத் தந்தால் இறந்த அந்த ஒருவனின் தீராக்காதலுக்கு அர்த்தம் என்ன? கடைசிவரை அவனிடம் தனது காதலை வெளிப்படுத்தாத குற்றவுணர்ச்சியோடு திரிய வேண்டும் கதாநாயகி.
சில நேரங்களில் எதார்த்தம் மிக அப்பட்டமானது. அதிலிருந்து விடுபட மனிதன் தன்னைத்தானே அழித்து மீண்டும் அதிலிருந்து பிறந்துவர வேண்டியதாக இருக்கிறது. எல்லா மனிதருக்கு அந்த சக்தி இருப்பதும் இல்லை. அந்த நம்பிக்கையை அந்த சக்தியை ஒருவருக்கு ஒரு ஃபேண்டஸி படம் கொடுக்கிறது என்றால் அது கலையாகிறது. இறந்த அந்த காதலன் ஒரு ஈயாக மறுபிறப்பு எடுக்கிறான். தனது காதலியை சென்றடைகிறான். அவளிடம் தனக்கு நடந்த நீதியை தெரிவிக்கிறான். இருவரும் சேர்ந்து அந்த வில்லனை பழிவாங்குகிறார்கள். கடைசியில் தனது காதலிக்காக இறக்கவும் துணிகிறான். இரண்டு மனிதர்களை வைத்து இந்தக் கதையை எடுத்திருந்தால் அது அதே பழைய காதல் கதைதான். நாம் பழக்கப்பட்டு சலித்துப் போன இந்த உலகத்தின் ஒவ்வொரு துளியையும் மீண்டும் நமக்கு புதிதாக முதல் முறை பார்த்த அனுபவத்தைக் கொடுப்பதே ஒரு நல்ல ஃபேண்டஸி படத்தின் இலக்கு. நான் ஈ அந்த இலக்கை மிகச் சரியாக சென்றடைந்தது.