என் வீட்டு படி ஏறி வந்து என்னை நடிகையாக்கினார் பாரதிராஜா - முதல் சந்திப்பு குறித்து மனம் திறந்த ராதிகா
நடிகை, தயாரிப்பாளர் என்று தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் தனக்கென தனித்துவமான ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார் ராதிகா சரத்குமார்.
நடிகை, தயாரிப்பாளர் என்று தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரை உலகிலும் தனக்கென தனித்துவமான ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளார் ராதிகா சரத்குமார்.
1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை ராதிகா. இவர் எம்.ஆர்.ராதாவின் மகள். ராதாரவி, நிரோஷா ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். ராதிகா, மீண்டும் ஒரு காதல் கதை (1985) என்ற படத்தை முதன்முதலில் தயாரித்தார். இந்த திரைப்படம் இந்திரா காந்தி விருதை வென்றது. படத்தில் நடித்த பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார்.
வெளிநாட்டவரான ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்குப் பிறந்தவர் தான் ரயான் என்ற பெண் குழந்தை. பின்னர் அவரையும் விவாகரத்து செய்தார். கடைசியாக அவர் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஓர் ஆண் பிள்ளை உள்ளார்.
இந்நிலையில் நடிகை ராதிகா, தன்னை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் பாரதிராஜாவுடனான தனது முதல் சந்திப்பு பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
நியாயம் காவலி (1981) படத்திற்காக சிறந்த தெலுங்கு நடிகை, தர்ம தேவதை (1986), நீதிக்கு தண்டனை (1987) மற்றும் கேளடி கண்மணி ஆகிய படங்களுக்காக சிறந்த தமிழ் நடிகைக்கான விருதை வென்றுள்ளார். அவர் இடி கதா காடு (தெலுங்கு), அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமாய், வாணி ராணி, தாமரை மற்றும் சித்தி போன்ற தொடர்களைத் தயாரித்து உள்ளார். ராதிகா ஒரு தேசிய விருது (தயாரிப்பாளர் பிரிவில்), 6 - பிலிம்பேர் விருதுகள் தெற்கு, 3 - தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், 1 - சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் மற்றும் 1 - நந்தி விருதுகளை வென்றுள்ளார்.
அவர் பேச்சிலிருந்து..
நான் அப்போதுதான் லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தேன். ஒரு நாள் என் வீட்டிற்கு பாரதிராஜா வந்தார். அவரைப் பார்ப்பதற்கு எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. நீண்ட முடியும் அவரது தோற்றமும் சந்தேகத்தை தந்தது. உள்ளே வரலாமா என்று கேட்டார். நான் முடியாது என்றேன். உடனே வீட்டில் யாராவது இருந்தால் கூப்பிடச் சொன்னார். என் அம்மா வந்தார். அவருக்கு கொஞ்சம் சினிமா அறிமுகம். அவரிடம் பாரதிராஜா நான் தான் 16 வயதினிலே இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அம்மா அவரை உள்ளே வரவேற்றார். வந்து அமர்ந்தவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் கோபமடைந்தேன். அம்மா ஏன் என்னை இவர் இப்படிப் பார்க்கிறார் என்று கேட்டேன். உடனே அவர் நீ சினிமாவில் நடிப்பியா என்று கேட்டார். நான் உடனே என்னை யார் திரையில் பார்ப்பார்கள் என்றேன். இல்லை, இல்லை நீ நடிக்க வேண்டும் என்றார். என்னை நடிக்க வைத்தார். அவர் அன்று எனக்கு வாய்ப்பு தராவிட்டால் இன்று நான் என்னவாக இருந்திருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை.
அதன் பின்னர் நான் திரையில் நிறைய படங்களில் நடித்தேன். அதன் பின்னர் எனக்கு திருமணமானது. நான் குழந்தை பெற்று மருத்துவமனையில் இருந்தேன். என்னைப் பார்ப்பதற்காக பாரதிராஜா சார் மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் என்னிடம், உனக்காக நான் ஒரு கதை செய்துள்ளேன். நீ தான் விருமாயியாக நடிக்க வேண்டும் என்றார். என்ன சார் விளையாடுகிறீர்களா என்றேன். ஆனால் அவரோ என்னை 2 மாத கைக்குழந்தையுடன் வத்தலகுண்டுக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பை ஆரம்பித்தார். விருமாயியாக நடிக்கவைத்தார். அதற்காக நான் விருதுகளைப் பெற்றேன்.
என்னுடைய வாழ்க்கையை மாற்றியவரே பாரதிராஜா சார் தான். சினிமாவை மாற்றியவரும் பாரதிராஜா சார் தான். என்னை மாதிரியான நபர்களை எல்லாம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தி சாதனை செய்தார். சினிமாவுக்கு புதிய அர்த்தம் கொடுத்தவர். தமிழ் சினிமாவை புதிய பரிமானங்களால் ஒரு புதிய உச்சத்துக் கொண்டு சென்றவர் பாரதிராஜா சார்.
இவ்வாறு ராதிகா பேசியுள்ளார்.