Radhika Apte: இன்னுமா இப்படி நினைக்கிறீங்க? ராதிகா ஆப்தேவை கொண்டாடும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்..
”பாலிவுட் சினிமா உயர்வானதாக இன்றளவும் கருதப்படுகிறது. பாலிவுட்டையும், பிராந்திய மொழி படங்களையும் நாம் சமமாகப் பார்க்க வேண்டிய நேரம் இது” - ராதிகா ஆப்தே.
மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதும் அனைத்து கதைகளும் பிரபலமடைந்து வரும் சூழலிலும் பாலிவுட் சினிமா அனைத்தையும் விட உயர்ந்ததாகக் கருதப்படுவதாக நடிகை ராதிகா ஆப்தே கவலை தெரிவித்துள்ளார்
ஏன் பாலிவுட் மட்டும் உயர்வு...
சாக்ரட் கேம்ஸ், பார்ச்ட், லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட படங்கள், தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ’காலா’ படத்தில் நடித்து தமிழ் ஆடியன்ஸை ஈர்த்தார்.
மராத்தி, இந்தி, பெங்காலி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இதுவரை ராதிகா ஆப்தே நடித்துள்ளார். இந்நிலையில், ஓடிடி தளங்கள், சப்டைட்டில்களால் அனைத்து மொழி கவனம் பெற்று வரும் இந்த சூழலில் பாலிவுட் சினிமா எல்லாவற்றையும் விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
நாடு, மொழி கடந்து நல்ல கதைகளுக்கு வரவேற்பு
இந்திய சினிமா குறித்து பேசிய அவர், பிராந்திய மொழி படங்கள் உள்பட அனைத்தும் ஓடிடி தளங்களில் ஒரே மாதிரியாக நேரடியாக வெளியாகின்றன. உலகம் சிறியதாகவும் அதே நேரத்தில் பரந்ததாகவும் மாறியுள்ளது. மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதும் அனைத்து வகையான கதைகளும் பிரபலமடைந்து வருகின்றன. ஆனால் இன்னும் பாலிவுட் சினிமா அனைத்தையும் விட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஒரு படத்தை இந்தியர் அல்லாதோர் பார்க்கும்போது அது எந்த மொழி படம் என்பது அவர்களுக்கு முக்கியமல்ல. நாடுகளைக் கடந்த நல்ல கதைகள் வரவேற்பைப் பெறுகின்றன.
பாலிவுட்டும் பிராந்திய மொழி படங்களும் சமம்
பாலிவுட்டையும், பிராந்திய மொழி படங்களையும் நாம் சமமாகப் பார்க்க வேண்டிய நேரம் இது. உலகின் எந்த மூலையில் இருந்தும் நாம் பிற மொழிப் படங்களைப் பார்க்கிறோம். சப்டைட்டில்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக நகர மக்கள் சப்டைட்டிலுடன் பிற மொழி படங்களை பார்த்து ரசிக்கின்றனர்.
மொழிகள் தாண்டி கதைகளும், உள்ளடக்கமும் வரும் நாள்களில் மேலும் முக்கியத்துவம் பெறும் என நம்புவோம். ஒரு மொழி படங்கள் பார்வையாளர்களை சென்றடைகின்றன, மற்ற மொழி படங்கள் அப்படி சென்றடைவதில்லை என பலரும் கூறுவது பற்றி எனக்குத் தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.
ஓடிடி தளங்களின் வளர்ச்சி
நெட்ஃப்ளிக்ஸ் உள்பட பல ஓடிடி தளங்களின் படங்கள், தொடர்களில் சில ஆண்டுகளாகவே நடித்து வரும் ராதிகா ஆப்தே, ஓடிடி தளங்களின் வளர்ச்சி குறித்தும் பேசியுள்ளார்.
”ஓடிடி தளங்கள் இப்ப்போது தொலைக்காட்சிகளாக மாறியுள்ளன. இங்கு வரும் கதைகளும் மிகவும் தனித்துவமாக உள்ளன. இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. சினிமா, தொலைக்காட்சிகளில் இதுவரை கையாளப்படாத கதைகளுக்கான வாசலை ஓடிடி தளங்கள் திறந்து வைத்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
ராதிகா ஆப்தே தற்போது சைக்காலஜிக்கல் த்ரில்லரான ஃபாரென்சிக்கில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.