Thalapathy Vijay: விஜய் என்னை உயரத்தில் ஏற்றி அழகு பார்த்தாரு.. ஆனால் சிம்புதேவன்.. புலம்பும் பி.டி.செல்வகுமார்!
Vijay: திரைத்துறையில் விதியின் வசத்தால் தான் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக தயாரிப்பாளர், பிஆர்ஓ பி.டி.செல்வக்குமார் கூறியுள்ளார்.
திரைத்துறையில் விதியின் வசத்தால் தான் கசப்பான அனுபவங்களை சந்தித்ததாக தயாரிப்பாளர், பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் (Vijay) இரட்டை வேடத்தில் நடித்த படம் “புலி”. ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, நந்திதா, கருணாஸ், சத்யன், தம்பி ராமையா, விஜயகுமார், ரோபோ சங்கர், ஜோ மல்லூரி, ஆடுகளம் நரேன், இம்மான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில் இந்தப் படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் உடன் எஸ்.கே.டி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் படுதோல்வியடைந்தது.
ஆனால் உச்ச நடிகராக இருந்த காலக்கட்டத்தில் விஜய் இப்படிப்பட்ட ஒரு பரீட்சார்த்த முயற்சியை மேற்கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. மேலும் இப்படி ஒரு படம் விஜய் ரசிகர்களுக்கும் மறக்க முடியாத வருத்தத்தைக் கொடுத்தது. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முதல் நாள் தயாரிப்பாளர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது. படமும் தாமதமாக ரிலீஸ் ஆகியது.
இப்படியான நிலையில் இந்தப் படத்தை தயாரித்த எஸ்கேடி பிலிம்ஸ் உரிமையாளர் பி.டி.செல்வகுமார் விஜய்யின் பிஆர்ஓ- வாக இருந்தவர். அவர் ஒரு நேர்காணலில் இப்படம் மற்றும் விஜய் பற்றி பேசியுள்ளார்.
அதாவது, “மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கான படம் கொடுக்க வேண்டும் என்பது விஜய்க்கும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் மிக முக்கியமான குறிக்கோளாக இருந்தது. அதனால் ஒரு சில படங்களை பிற மொழிகளில் இருந்து தேர்ந்தெடுத்து ரீமேக் செய்வார்கள். ஒரு படம் தோல்வியடைந்தால் அடுத்த படத்தை சரியாக கொடுக்க வேண்டும் என நினைப்பார் விஜய். அதுவரை அவருக்கு தூக்கமே வராது.
எல்லாருக்கும் ஒரு கட்டத்தில் சறுக்கல் என்பது வரும். புலி படத்தை விஜய் என்னிடம் தயாரிக்கக் கொடுத்தார். ஒரு ஹீரோவாக பிஆர்ஓவுக்கு முதல் முறையாக படத்தைக் கொடுத்தார். இது சக பணியாளர்களுக்கு பிடிக்கவில்லை. பொறாமை இருக்கத்தான் செய்தது. புலி படம் முதல் நாள் வரை நன்றாக பப்ளிசிட்டி பண்ணியிருந்தோம். அவருடைய மார்க்கெட்டுக்கான நல்ல வியாபாரம் ஆகியிருந்தது.
ஆனால் முதல்நாள் வருமான வரித்துறை சோதனை என்றவுடன் அதைப் பெரிதாக பேசினார். அதை விஜய்யோ, நானோ அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு விநியோகஸ்தராக, இயக்குநராக என எல்லா ஏரியாவிலும் நல்ல அனுபவம் இருந்தது. ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. இந்த நேரத்திலா சிம்புதேவன் இப்படி ஒரு சொதப்பல் படம் எடுக்க வேண்டும்.. என்ன செலவு வேண்டுமானாலும் பண்ணுங்கள் என சொல்லியும் விதி விளையாடிவிட்டது.
ரிலீசுக்கு முன்னாடி அவுட்புட் பார்க்கும்போதே தெரிந்து விட்டது. அவ்வளவு பெரிய பிசினஸ். யாரிடம் போய் என்ன சொல்ல முடியும். இரவெல்லாம் தூக்கமே இல்லை. நான் ஏதோ தப்பு பண்ணி விட்டதாக மனைவியிடம் புலம்பியுள்ளேன். இந்த மாதிரியான கசப்பான அனுபவங்கள் சினிமாவில் இருந்து தள்ளி இருக்க வைத்துவிட்டது. திரைத்துறையில் கஷ்டப்பட்டு வந்த எனக்கு அப்படி ஒரு சூழல் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வருமான வரித்துறை வந்தது கூட பிரச்சினையில்லை. ஆனால் படம் கூட சரியாக எடுக்க முடியாமல் போனதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.