Kamalhaasan Project K : ஹாலிவுட் வட்டாரத்தில் புராஜெக்ட்-கே டீசரை வெளியிடும் கமல்
பான் இந்தியா படமாக உருவாகும் ‘புராஜெக்ட் கே’-வின் டீசரை சான் டியாகோ காமிக்-கான் விழாவில் நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
பான் இந்தியா படமாக உருவாகும் ‘புராஜெக்ட் கே’-வின் டீசரை சான் டியாகோ காமிக்-கான் விழாவில் தீபிகா படுகோன், பிரபாஸூடன் இணைந்து நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் நடிப்பில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் ‘புராஜெக்ட் கே’. கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம், சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. அறிவியல் சார்ந்த புனை கதை பாணியில் எடுக்கப்பட்டு வரும் புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்காக 20 நாட்களுக்கு கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கான படப்பிடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதம் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பான் இந்தியா படமாக உருவாகி வரும் புராஜெக்ட் கே-வின் டீசரை பிரமாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் நடைபெறும் சான் டியாகோ காமிக்-கான் விழாவில் ‘புராஜெக்ட்-கே’ படத்தின் டீசர், முழு டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 20ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் தீபிகா படுகோனே, பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் பங்கேற்று டீசரை வெளியிட உள்ளனர். முன்னதாக 19-ஆம் தேதி இரவு நடைபெறும் விருந்து நிகழ்வில் படக்குழு பங்கேற்கிறது.
சான் டியாகோவில், பிரபலமான ஹாலிவுட் படங்கள், நெட்பிளிக்ஸ் சீரிஸ், காமிக்ஸ் தொடர்பான படங்கள் திரையிடப்படுவது, அதன் முன்னோட்ட நிகழ்வுகள், காமிக் புத்தகங்களின் வெளியீடு உள்ளிட்டவை நடைபெறும். இதுவரை இந்திய படங்களின் டீசர் எதுவும் ஹாலிவுட் வட்டாரத்தில் வெளியிடாத நிலையில், புராஜெக்ட் கே அந்த சாதனையை படைக்க உள்ளது. இதன் மூலம் பாலிவுட், கோலிவுட் மட்டும் இல்லாமல் ஹாலிவுட் வட்டாரத்திலும் இந்திய படம் பேசப்படும். புராஜெக்ட் கே அறிவியல் சார்ந்த புனைக்கதை என்பதால், படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.