லவ் டுடே வெற்றி லக் என்று சொன்னார்கள்..ஆனால் இப்போ...டிராகன் வெற்றிவிழாவில் பிரதீப் ரங்கநாதன்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் 100 ஆவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து
''இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் 'நான் ஹீரோவாக போகிறேன்' என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் 'டிராகன்' என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.
'லவ் டுடே' படத்தை விட 'டிராகன்' படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில்
''இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், 'இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?' என கேட்டார். அதற்கு நான் 'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.
அதன் பிறகு 'லவ் டுடே' படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான். 'டிராகன்' படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் 'டிராகன்' அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.
'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் 'டிராகன்' படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் 'கோமாளி', 'லவ் டுடே' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக 'டிராகன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
என்னுடைய வெற்றிக்கு பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். 'டிராகன்' படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
நூறாவது நாள் வெற்றி விழாவில் 'டிராகன்' பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேக காணொலி திரையிடப்பட்டது என்பதும், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தினையும், அன்பினையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
***





















