வனிதாவுடன் நடிக்கும் படத்தில் புது அவதாரம் எடுக்கும் பவர்ஸ்டார்.. இது பிக்கப் அப்டேட்..!
பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கும் 'பிக்கப்' திரைப்படத்தில், அவர் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார்.
2 எஸ் என்டெர்டைன்மெண்ட் தயாரிக்கும் பிக்கப் திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடிக்க பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கி நடிக்கிறார். இதற்கு முன்னதாக பல வருடங்கள் முன்பு 'லத்திகா' என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். அந்த திரைப்படம் ஒரே ஒரு தியேட்டரில் ஒரு வருடம் ஓடியிருந்தது. அதையும் அவரே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ”கண்ணா லட்டு தின்ன ஆசையா” திரைப்படத்தில் முழுநேர காமெடி நடிகராக வலம் வந்த பிறகு, பல திரைப்படங்களில் கேமியோக்கள் செய்ய தொடங்கினார். அப்படி தனது தசாப்தகால சினிமா வரலாற்றில் இயக்குநர், கதாநாயகன், தயாரிப்பாளர், காமெடி நடிகர், குணச்சித்திர நடிகர் என பல ரூபங்கள் எடுத்திருந்தாலும், தற்போது எடுத்திருக்கும் இசையமைப்பாளர் ரூபம் முற்றிலும் புதிது.
எங்கு சென்றாலும் சர்ச்சைகளை வளர்க்கும் வனிதா விஜயகுமார் இந்த படத்தில் அவருக்கு இணையாக நடிக்கிறார். பிக்பாஸில் தொடங்கி, குக் வித் கோமாளி, BB ஜோடிகள் ஆகியவற்றில் சென்று நிகழ்ச்சிகளை பிரபலமாக்கி, பின்பு யூடியூபிலும் ஒரு வலம் வந்தார். அவர் நாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு இருக்குமென்று தெரிகிறது.
வனிதா இத்திரைப்படத்தில் பவர் ஸ்டாரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு பங்களாவில் குடியேறுகிறார். அந்த பங்களாவில் பேய்களின் அட்டகாசம் இருப்பதை அறிந்த இருவரும் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை திரில், திகில், காமெடி கலந்து முயற்சித்திருப்பதாக கூறுகிறார்கள். இதில் வனிதா மற்றும் பவர் ஸ்டாருடன் இணைந்து, மேலும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைகளின் உரிமையாளரான தமிழ்செல்வன், செந்தில், 'ரோஷன், ஜி.பி.முத்து, மீனாட்சி காயத்திரி, ஹர்சிதாதேவி, லட்சுமி பாலா, தீபிகா, குட்டி சரிதா, வெங்கய்யா பாலன், அகஸ்தியா என்று நட்சத்திரப்பட்டாளமே இதில் நடிக்கிறார்கள். சென்னை, பெங்களூர், மும்பை, மதுரை ஆகிய இடங்களில் படம் மளமளவென வளர்ந்து வருகிறது.
இந்த திரைப்படம் பவர்ஸ்டாருக்கு நூறாவது திரைப்படமாகும். அவர் தனது திரை உலக அனுபவங்களை கொண்டு இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு காமெடி பேக்கேஜைத் தந்துள்ளதாக கூறுகிறார். பாடல்களுக்கும் நன்றாக ட்யூன் போட்டு இந்தப் படம் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுப்பதாகவும், எல்லா பாடல்களும் ஹிட் ஆகும் என நம்புவதாகவும் கூறுகிறார். இந்தப் படத்தின் டைட்டிலில் கார்டில் வனிதாவுக்கு "வைரல் ஸ்டார்" என்ற பட்டத்தோடு பெயர் போடுவதாக படக்குழு அறிவித்துள்ளது மேலும் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.