Pooja Hegde : புறக்கணித்தாரா... புறக்கணிக்கப்பட்டாரா...? 10 ஆண்டுகளுக்குப் பின் ‛கம் பேக்’ வந்து கனவை கலைக்கும் பூஜா ஹெக்டே!
Pooja Hegde : வயதை கடந்து, இன்றும் இளமையோடு ரிட்டனாகியிருக்கும் பூஜாவை பூஜிக்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா.
‛மலமா பித்தா பித்தாதே ..மலமா பித்தா பித்தாதே.. மலமா பித்தா பித்தாதே..’ என எங்கு பார்த்தாலும் அரபிக்குத்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. கடும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய் நடிக்கிறார், நெல்சன் இயக்குகிறார், அனிருத் இசைக்கிறார் என்பதை கடந்து, பூஜா ஹெக்டே நடக்கிறார் என்கிற பரபரப்பும் படத்தில் இருந்தது. பூஜா ஹெக்டே என்ன, தமிழுக்கு புதியவரா என்ன? ஏற்கனவே தமிழ் படத்தில் நடித்தவர் தான்; ஆனால் அவர் மீதான எதிர்பார்ப்புக்கு காரணம், பிற மொழிகளில் குறிப்பாக தெலுங்கில் அவர் சமீபத்தில் நடித்த படங்களின் வெற்றியும், அவரது நடனமும், குறிப்பாக அவரது அழகும் தான்!
32வது வயதிலும் ‛ஸ்லிம் ஃபிட்’ உடல்வாகோடு உலா வரும் பூஜாவிற்கு தெலுங்கை போலவே, தமிழிலும் ரசிகர் கூட்டம் கூடியிருக்கிறது. கொடுமை என்னவென்றால், பூஜாவை அறிமுகம் செய்த தமிழ் சினிமா, அவரை அடுத்த 10 ஆண்டுகள் புறக்கணித்தது தான் ஏன் என தெரியவில்லை. 1990 ல் மும்பையில் பிறந்த பூஜா ஹெக்டே, 2012 ல் மிஸ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் தான் அறிமுகம் ஆனார். மிஸ்கின் இயக்கிய திரைப்படத்தில் மிக சுமாராக போன படம் முகமூடி. ஆனால், அந்த படத்தில் பூஜாவின் அறிமுகம் நன்றாக தான் இருந்தது. என்ன தான் இருந்தாலும், தோல்வி படங்கள் பலரின் அறிமுகத்தை அடிமட்டமாக்கி விடும். அப்படி தான், பூஜாவிற்கும் அமைந்தது.
ஆனால், தெலுங்கு திரையுலகம் பூஜாவை பூஜித்தது. 2014 ல் தொடங்கிய அவரது தெலுங்கு வேட்டை, இன்றும் அசுர வேட்டையாக தொடர்கிறது. முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து விட்டார் பூஜா. மெகா பட்ஜெட் படங்களிலும் அவரே புக் ஆகிறார். இடையில் ஹிந்து போய் வந்தாலும், தெலுங்கை அவர் விடாத பிடியாக பிடித்துக் கொண்டார். பூஜா உடன் அறிமுகம் ஆன பல நடிகைகள் இன்று ஃபீல்டில் இல்லை. ஆனால், பூஜா இன்றும் அதே செழிப்போடு வெற்றி நடைபோடுகிறார். அண்டை மாநிலத்தில் ஆர்ப்பரித்த பூஜாவை ஏனோ, அதன் பின் தமிழ் சினிமா கண்டுகொள்ளவே இல்லை.
2012 ல் அறிமுகமான பூஜாவை , 10 ஆண்டுகள் கழித்து, 2022ல் மீண்டும் பீஸ்ட் மூலம் அழைத்து வந்திருக்கிறது தமிழ் சினிமா. அதுவும், பெரிய ஹீரோ விஜய்க்கு ஜோடியாக. எப்படி நடந்தது இந்த மேஜிக்? அது தான் சினிமா. இங்கு அதிர்ஷ்டம் என்கிற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவார்கள். நான், வாய்ப்பு என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறேன்; பூஜா... மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி ஆகியிருக்கிறார். அதுவும் அசுரத் தனமான எண்ட்ரி.
அம்சமான நடனத்திறமை, நடிப்பும் வருகிறது, அதை விட கவரும் அழகு... இதெல்லாம் போதாதா தமிழ் ரசிகர்கள் கொண்டாட! அப்படி தான் இப்போது கொண்டாடப்படுகிறார் பூஜா ஹெக்டே. இந்த 10 ஆண்டுகளில் தமிழ் சினிமா பூஜாவை புறக்கணித்ததா, இல்லை தமிழ் சினிமாவை அவர் புறக்கணித்தாரா... என்கிற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், வயதை கடந்து, இன்றும் இளமையோடு ரிட்டனாகியிருக்கும் பூஜாவை பூஜிக்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா.
“அலமத்தி ஹபி போ
அலமத்தி ஹபி வந்தாலே
அலமத்தி ஹபி போ
அலமத்தி மத்தி வந்தா
அலமத்தி ஹபி”
ரீங்காரத்தின் பின்னணியில், மஜாவாக கனவில் வந்து சென்று கொண்டிருக்கும் பூஜா, தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என்றே தெரிகிறது.