Pattimandram Raja | ”அப்போதே ஓடிடலாம்னு நினைத்தேன் “ - சிவாஜி படத்தில் நடந்த அவமானங்களை பகிர்ந்த பட்டிமன்றம் ராஜா !
”ஏங்க வயதான தோற்றம்னு சொன்னாங்க. விக் ஏதும் வைப்பீங்களா என கேட்டேன். நீங்க இப்பவும் அப்படித்தான் இருக்கீங்க..”
பட்டிமன்ற பேச்சாளராக அறியப்பட்டவர் ராஜா. சாலமன் பாப்பையா தலைமையிலான அரசியல் , நையாண்டி நிறைந்த பட்டிமன்றத்தில் சாதூர்யமாக பேசி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். அவர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான சிவாஜி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ரஜினிக்கு மாமனாராகவும் , ஸ்ரேயாவிற்கு அப்பாவாகவும் நடித்திருப்பார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராஜா , அடுத்தடுத்து குரு என் ஆளு, மாப்பிள்ளை , குரு சிஷ்யா, கோ, கண்ணா லட்டு திண்ண ஆசையா, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் சித்ரா லக்ஷ்மணன் உடனான நேர்காணல் ஒன்றில் பேசிய ராஜா , தனது முதல் பட அனுபவம் குறித்தும் தனக்கு நடந்த அவமானங்கள் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பகிர்ந்த அவர் “எனக்கு முதல்ல எதுவுமே சரியா தெரியல. நான் வடபழனியில இருக்கும் ஆதித்யா ஹோட்டல்ல தங்கியிருந்தேன். விமான நிலையத்தில் இருந்து அழைத்து வந்து, என்னை தங்க வைத்துவிட்டு , காலையில் 7 மணிக்கெல்லாம் செட்ல இருக்க வேண்டும் என்றார்கள்.கீழ்பாக்கம் காலணியில ஒரு வீட்டுலதான் முதல் காட்சி எடுத்தாங்க.காலையில அங்க வந்துவிட வேண்டும் என்றார்கள். அது எங்கேயோ இருக்கும். இது எங்கேயோ இருக்கு. நான் இரவெல்லாம் தூங்கவே இல்லை. சினிமாவென்றால் என்னவென்றே தெரியாது. அதிகாலை 4.30 மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடுச்சு. ஆனால் இந்த சினிமா கம்பெனில ஒரு வேலை பண்ணிடுவாங்க. காலையில 5.45 காஃபி கொடுத்து 7 மணிக்கெல்லாம் கார் வந்துடும் . உன்னை கொண்டு போய் அங்க இறக்கி விட்டுடுவோம்ங்குறதுல புரடக்ஷன் சரியா இருக்காங்க. என்னை கொண்டு போய் ஒரு கேரவன்ல உட்கார வச்சாங்க, ஒருத்தர் எனக்கு மேக்கப் போட்டாரு. மேக்கப் போடும்போதே நான் கே.ஆர்.விஜயாவிற்கு மேக்கப் போட்டுருக்கேன் , அவருக்கு மேக்கப் போட்டுருக்கேன் என சொல்லிக்கொண்டே போனாரு. ஒரு வேளை பெரிய பெரிய நடிகர்களுக்கெல்லாம் போட்டுட்டு உனக்கு போடுறேன்னு சொல்லாம சொன்னாரானு தெரியல. அதன் பிறகு நான் கேட்டேன் ஏங்க வயதான தோற்றம்னு சொன்னாங்க. விக் ஏதும் வைப்பீங்களா என கேட்டேன். நீங்க இப்பவும் அப்படித்தான் இருக்கீங்க , அதெல்லாம் வேண்டாம்னு சொன்னாரு. அதன் பிறகு காஸ்டியூமர் ஒரு பணியனையும் வேஷ்டியையும் கொண்டு வந்து வச்சாரு. நான் எங்கப்பா சட்டை, சட்டை இல்லாம எப்படி நடிப்பேன்னு கேட்டேன் . இதுதாங்க உங்க காஸ்டியூம் , இயக்குநர் உங்களுக்கு சட்டை இல்லைனு சொல்லிட்டாருனு சொன்னாரு. இதுல கேரவன்ல இருந்து இறங்கி கிட்டத்தட்ட 750 மீட்டர் நடந்து போகனும். அப்போ பட்டிமன்றம் பார்த்த சில ஆட்கள் இருப்பாங்க இல்லையா, அதுல சிலர் என் காதுபடவே என்னையா இவரு அந்த பட்டிமன்றம் பேசுற ஆளாச்சே. இப்படி பணியனோட போயிட்டு இருக்காருனு பேசுனாங்க. முதல் காட்சியே 8 டேக், அப்போவே சினிமாவுல என்னால தாக்குப்பிடிக்க முடியாதுனு நினைத்தேன். முதல் நாளோட ஓடிட வேண்டியதுதான். மக்கள் நம்மல ஒரு வழி பண்ணிடுவாங்கன்னு நினைத்தேன். ஆனால் சங்கர் சார் , ரஜினி சாரோட பெருந்தன்மை என்னை படம் முழுக்க இழுத்துட்டு வந்துடுச்சு .” என வெளிப்படையாக தனது முதல் பட அனுபவத்தை பேசியுள்ளார் ராஜா.