9 Years Of Madras: அரசியலில் சுரண்டப்படும் மக்கள்.. வெளிச்சம் போட்டு காட்டிய பா.ரஞ்சித்.. 9 ஆண்டுகளை கடந்த மெட்ராஸ்..!
பா ரஞ்டித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் கடந்துள்ளன
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் இன்றுடன் 9 வருடங்களை கடந்துள்ளது.
மெட்ராஸ்
கடந்த 2014 ஆம் வருடம் மெட்ராஸ் திரைப்படம் வெளியானது. பா.ரஞ்சித் இயக்கி கார்த்தி, கேத்ரீன் டெரஸா, கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார்.
ஒரு சுவரின் கதை
காலம் காலமாக தங்களது அதிகாரத்தை காட்டும் வகையில் ஒரு சுவரை பயன்படுத்தி வருகிறார்கள் கண்ணன் தரப்பினர். கண்ணனின் தந்தை கிருஷ்ணப்பாவின் முகம் தான் அந்த சுவரில் தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. அதை எப்படியாவது மாற்றி அந்த சுவரை பிடிக்க வேண்டும் என்பதே எதிர் தரப்பில் இருக்கும் மாரியின் ஆசை. மாரியின் விசுவாசியாக இருக்கும் அன்பு வர இருக்கும் தேர்தலில் எப்படியாவது மாரிக்காக சுவரை கைப்பற்ற முடிவு செய்கிறான். மறுபக்கம் அன்புவின் நண்பனாக காளி இந்த பிரச்சனைகள் எதிலும் தலையிடாமல் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். ட்
கலையரசி என்கிற பெண்ணின் மேல் காதல் வந்து அவர் பின்னால் சுற்றி திட்டு வாங்குகிறார். சுவரை கைப்பற்றும் இந்த போராட்டத்தில் தனது நண்பனை இழக்கிறான் காளி. இதன் பிறகு தன் மக்களை லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்வது தெரிய வருகிறது. இதனையடுத்து என்ன நடக்கிறது என்பதே இப்படத்தின் கதையாகும்.
அரசியலில் பந்தாடப்படும் மக்கள்
வடசென்னை மக்களின் வாழ்க்கை அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கான கால்பந்து, டான்ஸ், கானா பாடல்கள் என ஒரு பக்கம் உயிர்ப்பான ஒரு மக்களின் வாழ்க்கையை காட்டி மறுபக்கம் அரசியல் லாபத்திற்காக இந்த மக்களை ஒவ்வொரு தரப்பும் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது படத்தின் சாரம். இது எல்லாவற்றுக்கும் நடுவில் இருந்துகொண்டு எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும் காளியை இந்த பிரச்சனைகளுக்குள் சூழ்நிலை இழுத்து வருகின்றன. காளியின் முன்கோபம் தனது நண்பன் மீதான அன்பு, இவை எல்லாவற்றில் இருந்தும் தன்னுடைய மக்களின் வாழ்க்கையை சுரண்டுபவர்களை அடையாளம் காட்டுகிறான் காளி.
அரசியல் ரீதியாக மெட்ராஸ் படம் ஒரு காத்திரமான படைப்பு என்றாலும் அதே அளவிற்கு அதன் அழகியல் அம்சங்களும். படத்தில் கிட்டதட்ட ஒரு கதாபாத்திரம் அளவிற்கு முக்கியத்துவம் பெறும் சுவர். ஒரு சுவர் எப்படி அதிகாரத்தின் குறியீடாக மாறுகிறது என்பதை படிப்படியாக காட்டுகிறது. அதே நேரத்தில் சுவரின் மீது தொடர்ச்சியாக அமானுஷ்யம் கட்டமைக்கப் பட்டே வருகிறது. சந்தோஷ் நாராயணின் இசையில் கீழிருந்து மேலாக செல்லும் கேமராவில் பார்க்க ஒரு நொடி சுவரை பார்த்து பயப்படும் அளவிற்கான ஒரு பிம்பம் படத்தில் உருவாகிவிடுகிறது.
சோம்பேறித் தனமாக இளைஞர்கள் தங்களது பொழுதை எதுவும் செய்யாமல் பார்க்கில் படுத்துக்கொண்டு வெயிலில் சோம்பல் முறித்தபடி இருப்பது மாதிரியான காட்சிகள் படத்தில் எந்த முக்கியமான நகர்வையும் சொல்லவில்லை என்றாலும் பார்வைக்கு உறுத்தாமல் கதை சொல்லலுடன் இசைந்திருந்தன காட்சிகள்.
மாரியின் உண்மையான வேஷம் தெரிந்து காளி சுவரின் மேல் பெயிண்டை வீசியதும் அவரைத் தொடர்து எல்லாரும் வீசுகிறார்கள். தங்களுடைய அரசியல் லாபத்திற்காக மக்களை சுரண்டும் அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் மாரியை அடித்து விரட்டுகிறார்கள். ஏதோ ஒரு வகையில் இந்த அரசியல் படம் எல்லோருக்கும் ஒரு பாடமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.