Actor Prabhas | 150 கோடி ! பணத்துக்கு ஆசைப்படாத பாகுபலி பிரபாஸ்; திகைப்பில் முன்னணி பிராண்டுகள்..!
சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்களை வளைத்துப்போட்டு தங்களின் பிராண்ட் அம்பாஸிடர் ஆக்குவதில் எப்போதுமே முன்னணி நிறுவனங்களுக்குள் கடும் போட்டாபோட்டி நிலவும்.
சினிமா, விளையாட்டுத் துறை பிரபலங்களை வளைத்துப்போட்டு தங்களின் பிராண்ட் அம்பாஸிடர் ஆக்குவதில் எப்போதுமே முன்னணி நிறுவனங்களுக்குள் கடும் போட்டாபோட்டி நிலவும்.
ஆனால், கொம்பாதி கொம்பன் நிறுவனங்களுக்கும் டாட்டா சொல்லிவிடுகிறாராம் பாகுபலி நடிகர் பிரபாஸ். பாகுபலி இன்ட்ரோ பாடல் பானியிலேயே 'யாரு இவன்... யாரு இவன்...' என ஆச்சர்யப்பட்டு நிற்கின்றனவாம் விளம்பர நிறுவனங்கள். பிரபாஸ் தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளரான யு சூர்யா நாராயண ராஜு - சிவா குமாரி தம்பதியரின் மகன். 1979-ஆம் ஆண்டு பிறந்த இவர் ஆந்திரா மாநிலத்திலையே தனது கல்வியினை முடித்து தன தந்தையின் உதவியின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இவருக்கு ஒரு சகோதரியும், ஒரு சகோதரனும் உள்ளனர்.
2002-ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் தான் பிரபாஸை நாயகனாக அறிமுகப்படுத்திய முதல் படம். முதல் படத்தில் வசூல் வேட்டை இல்லாவிட்டாலும்கூட அவரது நடிப்பு பேசப்பட்டது. 2004-ஆம் ஆண்டு வர்ஷம் திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றுத் தந்தது. 2005-ஆம் ஆண்டு சத்ராபதி திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அளவில் வெற்றிபெற்றுத் தந்தது. அதன்பின்னர், தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு தனியிடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டார். 2015-ஆம் ஆண்டு, எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பாகுபலி பாகம் 1 வெளியானது. இத்திரைப்படம் பிரபாஸுக்கு இந்திய அளவில் அடையாளத்தைப் பெற்றுத்தந்தது. பின்னர் வெளியான பாகுபலி தி கன்க்ளூஷன் இவரை உலகமே திரும்பிப் பார்க்கச் செய்தது.
உலகளவில் பிரபலமான ஒருவரை விளம்பர நிறுவனங்கள் எப்படி விட்டுவைக்கும். இனிப்பை எறும்பு மொய்ப்பது போல், பிரபாஸை தங்களின் பிராண்ட் அம்பாஸிடர் ஆக்கிக் கொள்வதில் முன்னணி பிராண்ட்கள் போட்டாப் போட்டி போடுகின்றன.
கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் விளம்பரங்களைத் தேர்வு செய்வதில் கவனம் காட்டும் பிரபாஸ் பணத்தைவிட தனது இமேஜ் முக்கியம் என்கிறாராம். அதுமட்டுமல்லாது விளம்பரப் படங்களில் கவனம் திரும்பினால் தனது தொழிலுக்கு இடையூறு ஏற்பட்டுவிடுமோ என்பதற்காகவும் பிராண்ட் அம்பாஸிடர் பொறுப்புகளை நேர்த்தியாக ஓரங்கட்டிவிடுகிறாராம். இதுவரை இரு பொருட்களுக்கு மட்டுமே பிரபாஸ் பிராண்ட் அம்பாஸிடராக இருந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
2015ல், மகிந்திராவின் டியுவி 300 கார், 2017ல் ஜியோனி இந்தியா மொபைல் போன் என இரண்டு பொருட்களுக்கு மட்டுமே பிராண்ட் அம்பாஸிடர் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் பற்றிய இந்தச் செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பிரபாஸைக் கொண்டாடி வருகின்றனர். பணத்துக்கு ஆசைப்படாத பிரபாஸ் ரியல் ஹீரோ என்று மெச்சுகின்றனர். பிரபாஸ் தான் உண்மையான சினிமாக் காதலன் என்றும் அவரின் ரசிகர்கள் சிலர் உருகுகின்றனர்.