Nawazuddin Siddiqui: எத்தனை கோடி கொடுத்தாலும் இனிமே இதை நான் செய்யமாட்டேன்.. நவாஸுதீன் சித்திக்கி அதிரடி..
சென்ற இடங்களில் எல்லாம் நீ ஒரு நடிகனைபோல் இல்லை.. அதனால் வேறு ஏதாவது வேலை தேடிக்கொள் என விரட்டியவர்கள்தான் அதிகம் - நவாசுதீன் சித்திக்
இன்று பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக இருக்கும் நவாசுதீன் சித்திக் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில வினாடிகள் மட்டுமே நடிக்க கூடிய காட்சிகள் மூலம் தனது திரை பயணத்தை தொடர்ந்தவர். ஒரு முழுநீள 5 நிமிட காட்சியில் நடிக்கவே ஐந்து வருடங்கள் எடுத்துக் கொண்டது. சென்ற இடங்களில் எல்லாம் நீ ஒரு நடிகனை போல் இல்லை அதனால் வேறு ஏதாவது வேலை தேடி கொள் என விரட்டியவர்கள்தான் அதிகம் என்பதை அவரே ஒரு நேர்காணலில் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிப்பு திறமையால் அங்கீகாரம் :
ஆண்டுகள் உருண்டோட எதார்த்தமான இயக்குனர்கள் சினிமா துறையில் நுழைய நவாசுதீன் சித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர தொடங்கினார். கமர்ஷியல் பட தயாரிப்பாளர்கள் கண்களில் அதற்கு பிறகு தான் இவர் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியவந்து பின்னர் வாய்ப்புகள் கொடுத்து அங்கீகரிக்க ஆரம்பித்தனர். இப்படி வாழ்க்கையை தொடங்கிய நவாசுதீன் சித்திக்கை மனதில் வைத்து கொண்டே கதைகளை உருவாக்கும் உயரத்திற்கு தன்னுடைய நடிப்பு திறமையால் இன்று வளர்த்துள்ளார்.
View this post on Instagram
முன்னணி ரோல்களில் மட்டுமே நடிப்பேன் :
இந்திய அளவில் பிரபலமான நவாசுதீன் சித்திக் தற்போது அமெரிக்கன் திரைப்படமான ராபர்டோ ஜிரால்ட் இயக்கத்தில் உருவாகும் லக்ஷ்மன் லோபஸ் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். அப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படி முன்னணி கதாபாத்திரம் கொடுக்கப்படாவிட்டால் வெளிநாட்டு படங்களில் இனிமேல் நடிக்க போவதில்லை என கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மிகவும் வெளிப்படையாக பல விஷயங்களை பரிமாறியுள்ளார் நடிகர் நவாசுதீன் சித்திக்.
சிறிய ரோல்களில் நடிக்க மாட்டேன் :
இந்த சினிமா துறையில் ஏராளமான சிறிய கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். அதுவே போதுமானது. இனிமேல் 25 கோடி கொடுத்தாலும் அதுபோல சிறிய கதாபாத்திரங்களில் நான் நடிக்கமாட்டேன். நான் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்கவே விரும்புகிறேன். பணம், புகழ் இரண்டுமே நாம் செய்யும் வேலையின் தரத்தில்தான் உள்ளது என்று நான் உணர்கிறேன். உங்களுடைய வேலையை நீங்கள் முழுமையாக சரியாக செய்தால் பணமும் புகழும் தானாக உங்களை தேடி வரும். நீங்கள் அவற்றை துரத்தினால் ஒருபோதும் உங்களின் கைகளில் அது சிக்காது. எனவே உங்களுடைய வேலை எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்யுங்கள்" என்றார்.
பெண் இயக்குநர்களின் பார்வை வேறு :
மேலும் அவர் கூறுகையில் "கடந்த பத்து ஆண்டுகளில் நான் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சிறப்பானதாக, சவாலானதாக நடிக்க முயற்சித்துள்ளேன். ஒரு நடிகரால் அவருக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்தை சிறப்பானதாகவும் மாற்ற முடியும் அதே சமயத்தில் மோசமானதாகவும் மற்ற முடியும். எனவே அது நடிகரை பொறுத்து மாறுபடும். ஏராளமான பெண் இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் இந்த உலகை பார்க்கும் விதமே தனி அழகு. ஒரு இயக்குநரை இயக்குநராகவே பார்க்கிறேன். எனக்கு ஆண் பெண் என்ற வேறுபாடு கிடையாது. ஆனால் பெண்களின் கருத்து வித்தியாசமாக இருக்கும்" என்றார் நவாசுதீன் சித்திக்.
தற்போது அக்ஷத் அஜய் சர்மா இயக்கும் ‘ஹட்டி’ எனும் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நவாசுதீன் நடித்து வருகிறார்.