Thalapathi 67: தளபதி 67 படத்தில் இணைந்த மிஷ்கின்.. விஜய் பற்றி சொன்ன ரகசியம் என்ன தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படமான, வாரிசு பொங்கலை முன்னிட்டு கடந்த 11ம் தேதி வெளியானது. ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத் குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்த இந்த படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலக அளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
தளபதி 67
இதனைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்டில் விஜய் நடித்து வருகிறார்; இத்திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை. ஆனாலும், லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, இப்போதே தளபதி 67 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் விண்ணை முட்டியுள்ளன.
படப்பிடிப்பு தீவிரம்:
கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில், திரிஷா,மன்சூர் அலிகான்,சஞ்சய் தத் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பூஜை டிசம்பர் மாத தொடக்கத்தில் ஏ.வி.எம் ஸ்டுடியோஸில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, சென்னை பிரசாத் லேப்பில் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. அனாலும் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தொடர்பான விவரங்கள் உள்ளிட்ட எந்த விவரங்களும் வெளியாகாமலேயே இருந்தது. இந்நிலையில் தான், தளபதி 67 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதை, இயக்குனர் மிஷ்கின் உறுதிபடுத்தியுள்ளார்.
விஜய் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி:
இதுதொடர்பாக பேசியுள்ள மிஷ்கின், “யூத் திரைப்படத்தின் போது நான் விஜயுடன் சேர்ந்து பணியாற்றினேன். 20 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் அவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளேன். பெரிதாக ஒன்றும் அவர் மாறவில்லை. தற்போதும் அவர் அதிக இளமையாகவும், அழகாகவும் இருக்கிறார். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கம் எனக்கு பிடித்துள்ளது. படமும் சுவாரஸ்யமாக உருவாகிக்கொண்டிருக்கிறது”, என தெரிவித்துள்ளார்.
யூத் படத்தில் பணியாற்றிய மிஷ்கின்:
கடந்த 2002ம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் யூத். அந்த படத்தில், வின்சென்டிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மிஷ்கின், யூத் படத்தில் ஒரு சிறிய கதாபத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் உடன் அவர் இணைந்து நடிக்க உள்ளார்.
10 நாட்களில் அப்டேட்:
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசி இருந்த லோகேஷ் கனகராஜ், ”வாரிசு படம் வெளியாவதை ஒட்டி தளபதி 67 அப்டேட் எதும் கொடுக்காமல் இருந்தோம். தற்போது படம் வெளியாகிவிட்டது. இன்னும் 10 நாட்களில் தளபதி 67 அப்டேட் வரும். அதன் தொடர்ச்சியாக அப்டேட்கள் வரும். படம் வெளியாவது பொங்கலுக்கா? தீபாவளிக்கா? என்பது இன்னும் முடியவில்லை. சூட்டிங் நடைபெற்று வருகிறது.” என கூறி இருந்தார். இதன் காரணமாக படம் தொடர்பான அப்டேட்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.