My Dear Marthandan: 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதாப் போத்தன் செய்த மேஜிக் ‛மைடியர் மார்த்தாண்டன்’
My Dear Marthandan: 32 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான மைடியர் மார்த்தாண்டன், அப்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம்.
மறைந்த இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் பிரதாப் போத்தனின் மிக முக்கியமான படைப்பு மைடியர் மார்த்தாண்டன். தமிழ் சினிமா எத்தனையோ உலகத்திற்குள் கதையை சொல்லியிருக்கிறது. தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கி, அதனுள் கதை சொல்பவர் பிரதாப் போத்தன்.
அப்படி தான், மைடியர் மார்த்தாண்டன் படத்தை உருவாக்கியிருப்பார். மன்னர் ஆட்சியே இல்லாத இந்தியாவில், ஒரு மன்னர் குடும்பம் இருப்பதாக கூறியிருப்பார். அந்த மன்னர் குடும்பத்தின் இளவரசரான பிரபுக்கு, அந்த சொகுசு சூழல் பிடிக்காது. ஆனாலும் தங்கள் மகன், அடுத்த நாட்டை ஆள தயாராக வேண்டும் என்கிற ஆசை அரசனான எஸ்.எஸ்.சந்திரனுக்கும், ராணி கோவை சரளாவுக்கும்.
View this post on Instagram
அவர்களது பாரம்பரிய முறைகளை இளவரசருக்கு போதிப்பார்கள். அதிலிருந்து விடுபட, அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்யும் இளவரசரை தடுக்க, ராஜா, ராணி மேற்கொள்ளும் முயற்ச்சிகள் எல்லாம் தோல்வியடைகிறது. இறுதியில் இளவரசரின் முடிவுக்கு உடன்படும் அவர்கள், அதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, அவருக்கு உதவியாளர் ஒருவரையும், ரயில் நிறைய பொன் பொருளை அனுப்பி வைக்கிறார்கள்.
வெளிஉலகத்திற்கு வரும் இளவரசன், அங்கு சந்திக்கும் சூழல்கள், ஏமாற்றம், காதல், பிரிவு இது தான் மைடியர் மார்த்தாண்டன். வித்தியாசமான கதை களத்தில், அதற்கு ஏற்ப ஒளிப்பதிவு, இசை என எல்லாமே நேர்த்தியாக கொடுக்கப்பட்ட ஒரு மெகா ஹிட் திரைப்படம். பிரபு-குஷ்பூ காம்போவில் இதுவும் ஹிட் படம். கவுண்டமணியின் கலகலக்கல் காமெடி, இன்றும் பேசப்படுகிறது.
View this post on Instagram
இசைஞானி இளையராஜாவின் மேஜிக் இசை, படத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தை தந்தது. அசோக்குமாரின் ஒளிப்பதிவு அரசாட்சியையும், மக்களாட்சியையும் தனித்தனியாக காட்டும். பொதுவாகவே காட்சிகளில் பிரதாப் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவார். இந்த படத்தில் அது கூடுதலாகவே இருக்கும். ஆர்.பி.விஸ்வம் எழுதி கதைக்கு பிரதாப் போத்தனின் இயக்கம் உயிர் கொடுத்தது என்பார்கள்.
அந்த வகையில் 32 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான மைடியர் மார்த்தாண்டன், அப்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம்.