எல்லா இடத்துலயும் மணிஹெய்ஸ்ட்.. அப்படி என்னதான் இருக்கு? இதப்படிங்க!
Money Heist Season 5: மணிஹெய்ஸ்ட் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படும் பெயர் இதுதான்.
மணிஹெய்ஸ்ட் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்படும் பெயர் இதுதான். நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவிருக்கும் சீரிஸின் பெயர் தான் இது. மணிஹெய்ஸ்ட் சீரிஸின் 5வது சீசனுக்கான விளம்பரம் அட 3 ஆம் தேதிக்குள் முந்தைய சீரிஸை பார்த்துவிட வேண்டும் என்று புதியவர்களுக்கும் ஆர்வத்தை ஊட்டியது.
ஸ்பானிஷ் க்ரைம் த்ரில்லர்..
மணிஹெய்ஸ்ட், ஸ்பெயின் நாட்டின் க்ரைம் த்ரில்லர் வகையறாவைச் சேர்ந்தது. இந்த சீரிஸின் கடைசி சீசனுக்கு லா காஸா தே பாப்பெல் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. முதல் அத்தியாயம் நெட்ஃபிளிக்ஸில் இன்று வெளியாகிறது. இந்த முதல் அத்தியாயம் நொடிக்கு நொடி திருப்பம் நிறைந்ததாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்த அத்தியாயத்தில் ஐவேரா மார்டோ, உர்சுலா கார்பெரோ, இட்ஸியார் இடுவோ, மிகுவெல் ஹெரான், ஜெய்ம் லொரென்டே, எஸ்தர் அசெபோ, பெட்ரோ அலோன்ஸோ என முந்தை சீரிஸில் நடித்த நடிகர்கள் இதிலும் நடிக்கின்றனர்.
2017ல் முதல் வெளியீடு..
மணிஹெய்ஸ்ட் முதன்முதலில் 2017ல் தான் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது. வெளியான வேகத்திலேயே சர்வதேச புகழை எட்டியது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆங்கில மொழியல்லாத பிறமொழி தொடர் ஒன்று அதிகளவில் பார்க்கப்படுகிறது என்றால் அது மணிஹெய்ஸ்ட் தான். மணிஹெய்ஸ்ட் 4வது சீசன் பார்வையாளர்கள் 65 மில்லியன் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா? இப்போது வெளியாகவுள்ள சீஸன் ஐந்தில் மொத்தம் 10 அத்தியாயங்கள் இருக்கும். இவை இரண்டு வால்யூமாக பிரிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பு மே 14 ஆம் தேதியே முடிவடைந்துவிட்ட நிலையில் அப்போதிருந்தே மனி ஹெய்ஸ்ட் ரசிகர்கள் பித்துப் பிடித்துத் திரிகின்றனர். முதல் வால்யூம் செப்டம்பர் 3லும், இரண்டாவது வால்யூம் டிசம்பர் 3லும் வெளியாகின்றன.
விடுமுறை விட்ட நிறுவனம்..
ஓடிடி தொடருக்காக விடுமுறை விடுவதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றினாலும் கூட உண்மையிலேயே அது நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த வெர்வ்லாஜிக் என்ற மென்பொருள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக செப்டம்பர் 3 அன்று ‘மணிஹெய்ஸ்ட்’ வெளியீட்டை முன்னிட்டு ‘நெட்ஃப்ளிக்ஸ் அண்ட் சில்’ (Netflix and Chill) என்ற பெயரில் விடுமுறை அளித்துள்ளது. பலரும் பொய்க் காரணங்கள் கூறி அன்று விடுப்பு எடுப்பதைத் தவிர்க்கவே விடுமுறை அளித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பெல்லா ஸாவ் பாடல்..
ஹெய்ஸ்ட் சீரிஸின் டைட்டில் பாடலான பெல்லா ஸாவ் பாடல் மிகவும் பிரபலமாகியுள்ளது. பலரது செல்ஃபோன் ரிங் டோன் கூட பெல்லா ஸாவ் பாடலாக மாறி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பாடலின் பின்புலம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. இது இத்தாலியின் மறுமலர்ச்சி காலத்தில் நெல் விவசாயிகளால் பாடப்பட்ட ஒரு கிராமியப் பாடல். தங்கள் முதுகை உடைக்கும் உழைப்புச் சுரண்டும் முதலாளிகளின் முகத்திரையைக் கிழிக்கும் வகையில் பாடப்பட்ட பாடல். இந்தப் பாடல் பின்னாளில் ஜெர்மனியின் நாஸிப் படைகளுக்கு எதிராகவும் சில வார்த்தைகள் மாற்றப்பட்டு பாடப்பட்டுள்ளது. மனி ஹெய்ஸ்ட் நெட்ஃபிளிக்ஸ் விளம்பரத்தில் இந்தப் பாடலுக்கு ஸ்ருதி ஹாசன், அனில் கபூர், ராதிகா ஆப்தே, ரானா டகுபதி என பிரபலங்கள் பலரும் ஆட்டம் போட்டுள்ளனர். அதனால் யூடியூபில் இந்தப் பாடலின் ஒரிஜினல் வெர்சனைத் தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
எத்தனை மணிக்கு ரிலீஸ்? | Money Heist Season 5 Release Time
மனி ஹெய்ஸ்ட் சீசன் 5 வால்யூம் (Money Heist season 5 “Volume 1) இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 3ஆம் தேதி) மதியம் 12.30 மணிக்கு ரிலீஸ் ஆகிறது. இரண்டாவது வால்யூம் (Volume 2) டிசம்பர் 3 மதியம் 1:30 மணிக்கு வெளியாகிறது.