Gayathri : விஜய் ரொம்ப அமைதி.. மாம்ஸ் போஸ் ரொம்ப எமோஷனல்.. மெட்டி ஒலி நடிகை ஓபன் டாக்
மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை காயத்ரி தனது திரையுலக அனுபவம் குறித்தும் விஜய் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலரும் இன்று திரையுலகில் கொடி கட்டி பறக்கின்றனர். ஒரு சிலர் சீரியல்களிலும் சீனியர் நடிகர்களாகவும் உள்ளனர். இந்நிலையில், மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை காயத்ரி தனது திரையுலக அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவருடன் நடிகர் சஞ்சய் பார்கவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ரொம்ப அமைதி
பிரபல யூடியூப் சேனலில் பேட்டியளித்த நடிகை காயத்ரி, ராஜாவின் பார்வையிலேயே படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தேன். இப்போது யாரும் நினைவு வைத்திருப்பார்களா என்று தெரியாது. அதுதான் எனக்கு முதல் படம். அதற்கு முன்பு அஜித்துடன் நடித்திருக்கிறேன். இதுதான் முதல் அனுபவம். விஜய் இப்போது மட்டும் அல்ல படப்பிடிப்பில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால், ஆக்சன் சொன்னா வேற மாதிரி நடிப்பார். பர்பெக்ஷனாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இவர் தான் சுஜாதாவா?
நான் முதன் முதலில் கொலையுதிர் காலம் என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகம் ஆகிறேன். நான் எழுத்தாளர் சுஜாதா சாரை பார்த்தது இல்லை. எனக்கு அவர் யாருன்னே தெரியாது. என் பக்கத்திலேயே அவரும் இருக்காரு. சுஜாதா என்றதும் பெண்தான் என நினைத்துக்கொண்டு அவரிடமே சுஜாதா வந்துட்டாங்களா கேட்டேன். அப்புறம் அவங்க மனைவியின் பெயரைத்தான் வைத்துக்கொண்டார் என்பதும் அவர் ஒரு ஆண் என்பதும் தெரிந்துகொண்டேன். அவர் மிகப்பெரிய எழுத்தாளர் என்று தெரியாமல் இப்படி கேட்டதும் கோபப்படாம நான்தான்மா அது என்றார். அந்த நாளை மறக்கவே முடியாது. அவர்கிட்ட நான் எனக்கு தெரிந்த மொழியில் பேசுறேன், தமிழில் பேசுங்க என சிலர் சொன்னார்கள் எனக்கு அப்போ தமிழ் பேச வராது என காயத்ரி சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
திருமுருகன் சார்கிட்ட கத்துக்கிட்டேன்
பல நினைவுகளை நினைவுகூர்ந்த நடிகை காயத்ரி மெட்டி ஒலி சீரியலில் நடித்த அனுபவம் குறித்து தெரிவித்தார். அதில், திருமுருகன் சார் செட்டில் மட்டும் ரொம்ப அமைதியாக இருக்கும். சின்ன சத்தம் போட்டா கூட அவருக்கு பிடிக்காது. சீன் எடுக்குற வரைக்கும் அமைதியாக இருக்கணும். அதுக்கப்புறம் குட்டிக்கரணம் அடித்தால் கூட கேட்க மாட்டார். அவர்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன். இதனால், பல மொழிகளில் நடிக்க உதவியது. கொரோனா காலத்தில் மெட்டி ஒலி சீரியலை பார்த்து பலரும் பாராட்டுறாங்க. இப்போ நான் மாமியார் ரோல் பன்றேன். ஆனால், என்னை இன்னும் மக்கள் மருமகளாக பார்ப்பது நகைச்சுவையாக இருக்கு என தெரிவித்துள்ளார்.
மெட்டி ஒலி 2 எப்போது?
மேலும் பேசிய காயத்ரி, மெட்டி ஒலி சீரியலில் நான்கு வருடங்களாக நடித்தோம். கடைசி நாள் படப்பிடிப்பில் அழுகுறதா, சிரிக்கிறதா என்ன பன்றதுன்னு தெரியலை. அதே டீம் நேரம் கிடைத்தால் மீட் பண்ணுவோம். பேசுவோம். திருமுருகன் சார்கிட்ட மெட்டி ஒலி எப்போ என்று நாங்களும் கேட்டுக்கிட்டு இருக்கோம். விரைவில் வரும் என்று சொல்கிறார். கண்டிப்பா மெட்டி ஒலி 2 வரும். செகண்ட் பார்ட்டில் எல்லோரும் இருந்து நடித்தால் நன்றாக இருக்கும். மாம்ஸ் போஸ் வெங்கட் மெட்டி ஒலி சொன்னால் ரொம்ப எமோஷனல் ஆயிடுவாரு. எங்களை விட்டுக்கொடுக்க மாட்டாரு. அவருக்கு ரொம்ப பிடித்த தொடர் மெட்டி ஒலி என காயத்ரி கலகலப்புடன் தெரிவித்தார்.





















