Marvel Loki: முடிந்தது மார்வெலின் லோகி எனும் தியாகியின் சகாப்தம்.. வில்லன் டூ ஹீரோ - கண்களை குளமாக்கும் டிவிஸ்ட்..
Marvel Loki: மார்வெல் திரையுலகில் (MCU) இடம்பெறும் லோகி கதாபாத்திரத்திற்கான வெப் சீரிஸின் (season 2), இறுதி எபிசோட் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Marvel Loki: மார்வெல் திரையுலகில் (MCU) இடம்பெறும் லோகி கதாபாத்திரத்திற்கான முடிவு ரசிகர்களிடயே, பெரும் மகிழ்ச்சியுடன் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ் (MCU):
உலகத்தை காப்பாற்றும் சூப்பர் ஹீரோக்களை சார்ந்த கதைக்களத்தை மையமாக கொண்டு, மார்வெல் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டு, மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸ் எனும் ஒரு பிரமாண்ட திரையுலகையே அந்நிறுவனம் கட்டமைத்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான கதபாத்திரங்கள் இருந்தாலும், ஒரு சில மட்டுமே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்படுகின்றன. அதில் தவிர்க்க முடியாத ஒரு கதாபாத்திரம் என்றால், ”லோகி”-க்கு மிக முக்கிய இடம் உண்டு. காரணம் அந்த கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட விதமும், வழங்கப்பட்டுள்ள கதைக்களங்களும், தற்போது அதற்கு வழங்கப்பட்டுள்ள முடிவும் தான்.
லோகி - குறும்புக்கார கடவுள்:
கடந்த 2011ம் ஆண்டு வெளியான தோர் படத்தில் தான் டாம் ஹிட்டல்ஸ்டன் நடித்த லோகி கதாபாத்திரம் முதன்முறையாக அறிமுகமானது. காட் ஆஃப் மிஸ்சீப் (குறும்புக்கார கடவுள்) என அழைக்கப்பட்டாலும், அவர் வில்லனாக தான் அந்த படத்தில் தோன்றினார். அதைதொடர்ந்து, மார்வெல் நிறுவனத்தின் பிராண்ட்டான அவெஞ்சர்ஸ் எனப்படும் ஹீரோக்களின் குழு உருவாக முதன்மையான காரணமாகவும் லோகி மாறினார். இதன் பிறகு தோர் - தி டார்க் வோர்ல்ட், தோர் ராக்னராக், மற்றும் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் ஆகிய படங்களிலும் லோகி கதாபாத்திரம் தோன்றியது.
வில்லன் டூ ஆண்டி ஹீரோ:
லோகி அறிமுகமானபோது சிறிய வில்லனாக இருந்தாலும், அவெஞ்சர்ஸ் படத்தின் மூலம் மார்வெல் சினிமாடிக் யூனிவெர்ஸின் முதல் மிகப்பெரிய வில்லனாக உருவெடுத்தார். எனக்கான அரியாசனம் வேண்டும், அதற்காக எதையும் செய்வேன், எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் எடுப்பேன் என்ற மோசமான கதபாத்திரமாக தான் அது எழுதப்பட்டு இருந்தது. அதுவே, தோர் டார்க் வோர்ல்ட் படத்தில் தாய் பாசத்திற்காக ஏங்கும் ஒரு கதாபாத்திரமாக மேம்பட்டு இருந்தது. தனது தனிமையை போக்கவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை வெளிப்படுத்தி இருந்தது. ராக்னராக் படத்தில் வில்லன் என்பதில் இருந்து ஆண்டி - ஹீரோ என்பதற்கான அடித்தளம் போடப்பட்டது. இன்பினிட்டி வாரில் தானோஸால் கொல்லப்பட்டார்.
Time's up. ⏰
— Marvel Studios (@MarvelStudios) November 10, 2023
The #Loki Season 2 finale is now streaming on @DisneyPlus. pic.twitter.com/tEWWkEv4GK
லோகி வெப் - சீரிஸ்:
இன்பினிட்டி வாருடன் லோகி கதாபாத்திரம் முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அதற்கான வெப் சீரிஸ் அறிவிக்கப்பட்டது. மார்வெல் கதாபாத்திரங்களுக்கான வேரியண்ட்களை மையப்படுத்தி ஒரு புதுவிதமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலகத்தையே தனது காலடியின் கீழ் கொண்டு வரும் இலக்கை கொண்ட கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட லோகி, இந்த வெப் சீரிஸில் என்ன நடந்தாலும் இந்த உலகத்தை காப்பற்றியே ஆக வேண்டும் எனும் வகையில் மேம்பட்டு இருந்தது. எதற்காக நீ இந்த உலகை காப்பாற்ற வேண்டும் என்ற கேள்வி எழும்போது, ”என்னால் இந்த உலகில் தனிமையில் இருக்க முடியாது, எனக்கு எனது நண்பர்கள் வேண்டும்” என கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் களங்கடித்தது. உண்மையில் தான் எதிர்பார்ப்பது அன்பையும் , எனக்கானவர்களையும் தான் என்பதை உணர்த்தி இருந்தது.
லோகி செய்த தியாகம்:
இந்நிலையில் தான் லோகி வெப் சீரிஸின் இறுதி எபிசோடில், உலகத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு லோகியிடம் வந்து சேருகிறது. இதற்காக அவருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒன்று தான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண்ணை கொல்ல வேண்டும். அல்லது தன் வாழ்நாள் முழுவதும் தனக்கென யாரும் இன்றி ஒரு இடத்தில் தனிமையில் அமர்ந்து, ஒட்டுமொத்த உலகத்தையும் கட்டிக் காக்க வேண்டும் என்பது தான் அந்த வாய்ப்புகள். தனது மகிழ்ச்சிக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன் என அறிமுகமான கதாபாத்திரம் லோகி. காலத்தின் போக்கில் நண்பர்களுடன் வாழ வேண்டும், தனிமை எனக்கு வேண்டாம் என கெஞ்சியது. ஆனால், இறுதியில் தனது நண்பர்களுக்காகவும், தான் நேசிப்பவர்களுக்காகவும், மரணம் என்பதே இன்றி வாழ்நாள் முழுவதும் தனிமையில் தவிக்கும் வாய்ப்பை தேர்வு செய்தது. இந்த பெரும் தியாகம் தான் லோகி கதாபத்திரத்தை முதல் நாளில் இருந்து, கடைசி நொடி வரை பார்த்த ஒவ்வொரு ரசிகனையும் கண்கலங்க செய்துள்ளது. உலகையே அழிக்க புறப்பட்டவன், அந்த உலகத்தை காப்பாற்றிட யாரும் செய்திட முன் வந்திராத ஒரு மாபெரும் தியாகத்தை செய்துள்ளன். இதனால் தான் மார்வெல் ரசிகர்கள் என்றும் மறந்திட முடியாத ஒரு ஆகச்சிறந்த கதாபாத்திரமாக உருவெடுத்துள்ளது லோகி..
டாம் ஹிட்டல்ஸ்டன் எனும் அரக்கன்:
லோகி எனும் கதாபாத்திரத்தை அது கடந்து வந்த பாதைகளை வார்த்தைகளால் விவரிப்பதன் மூலம் மட்டும், நிச்சயம் மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியாது. காரணம் லோகி என்பது ஒரு உணர்வு. அதனை டாம் ஹிட்டல்ஸ்டன் எனும் நடிப்பு அரக்கன் தனது அசகாய நடிப்பால் திரையில் அட்டகாசமாக வெளிப்படுத்தி இருப்பார். விளையாட்டாகவும், வில்லத்தனமாகவும் லோகி கதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்திய விதம், உண்மையாகவே லோகி என்பவன் இருந்தால் இப்படி தான் இருப்பான் என ரசிகர்களை நம்பச் செய்தார். அவரது நடிப்பிற்கான ஒட்டுமொத்த கிரீடமாக தான், லோகி வெப் சீரிஸின் இறுதி நிமிட காட்சிகள் அமைந்துள்ளன. ஒட்டுமொத்த உலகையும் தனது கைப்பிடியில் வைத்து இருக்கும் வேளையில் அவர் உதிர்த்த ஒரு சிறு புன்னகை ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது. எதிர்பார்த்ததை போன்றே தனக்கென ஒரு அரியணை கிடைத்த திருப்தி, தான் வேண்டாம் என கூறிய தனிமையே இனி வாழ்நாள் முழுவதுமான நண்பன் என்ற வருத்தம், தனக்கான நண்பர்கள் தன்னுடன் இருக்க மாட்டார்கள் என்ற ஏக்கம், உலகையே காப்பாற்றிவிட்டோம் என்ற மகிழ்ச்சி என ஒட்டுமொத்த உணர்வுகளையும், கண்களில் நீர் வழிய, உதட்டில் சிறு புன்னகையுடன் வெளிப்படுத்தி அதகளம் செய்து இருப்பார் டாம் ஹிட்டல்ஸ்டன் எனும் லோகி...!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

